அம்பாறை வன்முறை; குற்றவாளிகளை பிடிக்க, அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

🕔 March 14, 2018

ம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை வன்முறைகள் தொடா்பான வழக்கு விசாரணை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவங்கள் தொடர்பாக 07 குற்றவியல் பிரிவின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவா்களுள் முதலில் 05  பேரும் பின்னா் 02 பேருமாக 7 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடா்ந்தும் 04 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார், நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

“இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவா்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். எனவே, சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டும்” என்று, மனுதாரா் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றை கோரினர்.

வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த நீதிமன்றம், கைதாகியுள்ள சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்