வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு

🕔 March 14, 2018

கசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்து இனவெறுப்பினை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியதாக பொலிஸ் பேச்சாளர் “ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நத்தரன்பொத்த – குண்டசாலையில் அமைந்துள்ள மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்தே, இவை கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க (26 வயது) கைது செய்யய்பட்டுள்ளார். அவர் , கெங்கல்ல – திகன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில், மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்தில் தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போதே, அங்கு மேற்குறிப்பிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன” என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இனவாதத்தைத் தூண்டும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், பதாதைகள், கடிதங்கள், பெருமளவான ஆவணங்கள் மற்றும் கைப்பட்டிகள் போன்றவையும் மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்..

மேலும், நான்கு கணிணி இயந்திரங்கள், ஏராளமான வங்கிக் கணக்கு புத்தகங்கள், வங்கி பற்றுக் சீட்டுகள் மற்றும் வாகன அனுமதிப் பத்திரங்களும் அங்கிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments