யாழ் மாநகர சபையில், அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அநீதி; காற்றில் பறந்தன வாக்குறுதிகள்

🕔 March 14, 2018
– பாறுக் ஷிஹான் –

ள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பில்  வாக்குறுதிளித்த எந்த அரசியல் கட்சியும், தமது விகிதாசாரப் பட்டியல் ஊடாக முஸ்லிம்களை உறுப்பினராக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது  யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளன. இந்த நிலையிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட்டார அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (10 ஆம் வட்டாரம்) போட்டியிட்ட  முஸ்லிம் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியில் (13 ஆம் வட்டாரம்) போட்டியிட்ட முஸ்லிம் ஒருவரும் வெற்றியீட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படும் முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும், முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அவை யாவும் நிராகரிக்கப்பட்டு, தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

“யாழ் மாநகரசபையில் 45 உறுப்பினர்கள் உள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு 02 பிரதிநிதித்துவம் மட்டுமே கிடைத்துள்ளன.ஆனால் கடந்த மாநகர சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 05 ஆகக் கணப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் திட்டமிட்ட அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன” என்று, குற்றம்சாட்டப்படுகிறது.

மேற்படி  உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் இணைந்து வட்டார அடிப்படையிலும், பட்டியல் மூலமானகவும் களமிறங்கிய  முஸ்லிம் வேட்பாளர்கள், அக்கட்சிகளுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments