கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்

🕔 March 13, 2018

– மப்றூக், றிசாத் ஏ. காதர் –

ண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர், நிதி சேகரிப்பவர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக தனது பங்களிப்பினையும் வழங்கி, இனங்களுக்கு அப்பாலான மனித நேயத்தினை நிரூபித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா என்பவரே, பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட மக்களுக்காக, இவ்வாறு நிதி வழங்கியுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிதி சேகரிக்கப்படுவதாக, ஊடகமொன்றில் வெளியான செய்தியினைப் பார்த்த சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா, குறித்த ஊடகத்தைத் தொடர்பு கொண்டு, தானும் நிதிப் பங்களிப்பு செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

இதயைடுத்து, நிதி சேகரிப்பாளர்களை தொடர்பு கொள்வதற்கு குறித்த ஊடகத்தார் உதவியுள்ளனர்.

இதன் பின்னர், நிதி சேகரிப்பவர்களுடன் பேசிய சட்டத்தரணி சிவரஞ்சித், வங்கி ஊடாக, 10 ஆயிரம் ரூபாவினை தனது பங்களிப்பாக அனுப்பி வைத்துள்ளார்.

இனக் குரோதங்களால் மனித நேயம் மரித்துப் போய் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில், சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜாவின் இந்த செயற்பாடு அனைத்து சமூகத்தவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.

கருணையுள்ளம் கொண்டவர்களால் மட்டுமே, சக மனிதனின் வலியையும் இழப்புக்களையும் புரிந்து கொண்டு, இவ்வாறு உதவ முடியும்.

அநேகமாக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குகளுக்காக ஆஜராகும் சட்டத்தரணி சிவரஞ்சித், சில சமயங்களில் – அவர் ஆஜராகும் சில வழக்குகளுக்கு பணம் பெற்றுக் கொள்வதில்லை என்பதை, நாம் நேரில் கண்டுள்ளோம் என்பதையும் இங்கு பதிவு செய்தல் பொருத்தமாகும்.

Comments