இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம்

🕔 March 12, 2018

முஸ்லிம்கள் மீது, சிங்கள காடையர்களின் இன ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறமாக சிங்கள சமூகத்திலுள் இன்னுமொரு சாரார் தமது மனித நேயத்தினையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியுள்ள சம்பவமொன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது.

முஸ்லிம் நபரொருவர் ஆனமடுவ பிரசேதத்தில் நடத்தி வந்த ஹோட்டலொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சிங்கள இனவாதிகளால் தீ வைக்கப்பட்டது. அதில், அந்த ஹோட்டல் பாரியளவில் சேதமடைந்தது.

இந்தச் சம்பவம் நடைபெற்று சில மணித்தியாலங்களில், அங்கு திரண்ட சிங்கள மக்கள், அந்த ஹோட்டலை புனரமைப்பு செய்து கொடுத்ததோடு, ஹோட்டலில் மீண்டும் வியாபாரத்தையும் தொடங்கி வைத்துள்ளனர்.

ஆனமடுவ வர்த்தக சங்கம் மற்றும் அப் பிரதேசத்திலுள்ளவர்கள் இந்த புனரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சைக்கிளில் வந்த குழுவினர், குறித்த ஹோட்டலுக்கு தீ வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அப்பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள், வர்த்தக சங்கத்தினர்,  பௌத்த மதத்தலைவர்கள் மற்றும் மக்கள் இணைந்து, நேற்று ஒரே நாளில் அந்த ஹோட்டலை – முன்பு இருந்த நிலைக்கு மாற்றி, வியாபாரத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மேற்படி ஹோட்டலை புனர் நிர்மாணம் செய்வதற்காக 250க்கும் அதிகமானோர் ஒன்று திரண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, ஆனமடுவ பிரதேச சபைக்குக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாரும் இந்த புனரமைப்பு நடவடிக்கையில் இணைந்ததாகத் தெரியவருகிறது.

இரவு 07 மணிக்கு முன்னதாக, தீயினால் சேதமடைந்த ஹோட்டல் மீளவும் நிர்மாணிக்கப்பட்டது.

ஆனமடுவ நகரத்தில், முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரே முஸ்லிம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள மக்களில் ஒரு தரப்பினர் இனவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு, காடைத்தனங்களில் ஈடுபட்டுக் கொண்டிக்க, அந்த சமூகத்தைச் சேர்ந்த இன்னுமொரு தரப்பினர், மனித நேயத்தோடு – அடுத்த சமூகத்தவர்களை அரவணைத்து வாழவே விரும்புகின்றனர் என்பதை, இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்