தாக்குதலின் பின்னணியில், கடந்த அரசாங்கம் பயன்படுத்திய முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

🕔 March 8, 2018

– அஷ்ரப் ஏ சமத் –

முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதலின் பின்னனியில்,  கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படையினரும் உள்ளனர் என்றும், அவா்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் – ஜாதிக ஹெல உறுமய செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு போசும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அமைச்சர் சம்பிக்க மேலும் தெரிவிக்கையில்:

“அம்பாறை மற்றும் திகன சம்பவங்களில் உயிா் உடைமைகளை இழந்தவா்களுக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சி  தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பள்ளிவாசல், கோயில் மற்றும் பன்சல ஆகியவை ஊடாக,  சகல மதங்களையும் பிரநித்துவம் படுத்தும்  சமாதான குழுக்களை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் கண்டி தலாதா மாளிகையைக் கூட தாக்கியிருந்தபோதும், கண்டி வாழ் மக்கள்  அமைதியை நிலைநாட்டினாா்கள்.

ஆனால், தற்போது நாட்டின் இயல்பு நிலையைச் சீர்குலைப்பதற்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு என வேறு பிரதேசங்களில் வந்தவா்கள்தான் தற்போது அங்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்தக்  குழுக்கள் சட்டத்தை தமது  கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றனா் .  ஆயினும், அம்பாறை சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர், திகன சம்பவம் நடைபெற்றுள்ளது.  இதன்போது, பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் தமது கடமைகளை சரிவரச் செய்யவில்லை.

தவறான செய்திகளை பரப்புவதால் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது.  தாக்குதல் சம்பவங்கள் தொடா்ந்தும் பரவாமல்  தடுப்பதற்காகவே  ஜனாதிபதி அவசரகால சட்டத்தினை   07 நாட்களுக்கு பிறப்பித்துள்ளார்.

அண்மையில் பண்டாரவளையில் படையிலிருந்த ஒருவா்  குண்டை வெடிக்க வைத்தார். இதனையடுத்து மலையக பிரதேசங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக, புலிகள் அமைப்பு மீண்டும் உறுப்பெற்று விட்டது என சித்தரிக்க முற்பட்டனா்.

அந்தச் சம்பவம் நடந்து அடுத்த நிமிடமே,  ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள முக்கூட்டுத் தலைவா்கள், எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் உறுப்பெற்று விட்டதாக ஊடக சந்திப்பு நடத்தி தெரிவித்தாா்கள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக 1993ல் அவா்களை தோற்கடிக்க  எமது கட்சி  தயங்காமல்  முன்நின்றது.  அவ்வப்போது கிராண்பாஸ் சம்பவம் போன்று, முஸ்லீம் பள்ளிவாசல் பிரச்சினைகளும் பிரச்சினைகளும் எழுந்தன. ஆனால், எமது கட்சி முன்நின்று சமாதானத்தை நிலைநாட்டியது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்