பிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர்

🕔 March 3, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை செல்லவுள்ளார் என, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்‌ ரஹ்மான், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அம்பாறையில் இனவாதிகளால் தாக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை நேரில் பார்வையிட்ட பின், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விஜயத்தின்போது பள்ளிவாசல் நிர்வாகிகள், தாக்குதலுக்குள்ளான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தாக்குதலில் காயமடைந்தவர்கள் என பலரையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இனவாத தாக்குதலில் ஈடுபட்ட சூத்திரதாரிகளை உடனடியாக கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்ட பொலிஸார் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த கலவரம் உருவானதாக கூறும் பொலிஸாரின் கூற்றை முற்றாக மறுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள், இது திட்டமிடப்பட்ட இனவாத தாக்குதல் என்பதை பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

அம்பாறை கலவரம் தொடர்பான பொலிஸ் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு நாளை சென்று நேரில் பார்வையிட்ட பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் நீதியான முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன் இனவாத தாக்குதலில் ஈடுபட்டோரை கைதுசெய்வதிலுள்ள சட்ட நுணுக்கங்கள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.

இதேவேளை, இன்று மட்டக்களப்பு சென்றிருந்த ஜனாதிபதி அங்கிருந்தவாறே அமைச்சர் ரவூப் ஹக்கீமை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அம்பாறை கலவரம் தொடர்பில் கேட்டறிந்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்‌களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில், தாக்குதலில் ஈடுபட்டோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

அம்பாறை இனவாத தாக்குதல் தொடர்பில் திங்கட்கிழமை சட்டமா அதிபருடன் விசேட சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, தாக்குதல் சூத்திரதாரிகளை கைதுசெய்வதிலுள்ள சட்ட நுணுக்கங்கள் பற்றி ஆராயப்படுவதுடன், மேலதிக சட்ட ஆலோசனையும் பெறப்படவுள்ளது.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்