பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம்

🕔 March 2, 2018

ச்சை குத்துவதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே, மனிதன் பழக்கத்தில் கொண்டிருந்தான் என்பது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடலில் பச்சை குத்தப்பட்ட, ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளின் உடல் கண்டு பிடிக்கப்பட்டமையினை அடுத்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காட்டு மாடு மற்றும் காட்டுமிராண்டி ஆடுகளின் உருவம் ஆண் மம்மி ஒன்றின் கையின் மேற்பகுதியிலும், எஸ் (S) வடிவ அலங்காரம் – பெண் மம்மி ஒன்றின் கையின் மேற்பகுதி மற்றும் தோள்பட்டையிலும் பச்சைக்குத்தப்பட்டுள்ளன.

மேலும், தற்போது நம்பப்படுவதைவிட 1000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆபிரிக்காவில் பச்சைக்குத்தும் பழக்கம் இருந்துள்ளதை இந்த சான்று காட்டுகிறது.

“ஆர்கியோலோஜிகல் சைன்ஸ்” என்ற சஞ்சிகையில் இது தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது.

“அந்த காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்ற புரிதலை இந்த கண்டுபிடிப்பு மாற்றியமைத்துள்ளது” என்று, இந்தக் கட்டுரையின் முன்னிலை ஆசிரியர்களில் ஒருவரும், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் உடல் சார் மானுடவியல் காப்பாட்சியருமான டேனியல் அன்டாய்ன் கூறியுள்ளார்.

“05 ஆயிரம் ஆண்டு காலமாக, வியத்தகு முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த தனி நபர்களின் வாழ்க்கையின் புதிய உண்மைகளை இப்போதுதான் நாம் காண்கிறோம். இவை ஆபிரிக்காவில் பச்சைக்குத்துதல் இருந்ததாக நம்பப்படும் காலத்தை விட 1000 ஆண்டுகள் முன்னதாகவே இந்தப் பழக்கம் இருந்துள்ளதை காட்டுகிறது” என்று டேனியல் ஆன்றோனி பிபிசி நியூஸிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண் மம்மி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

முதுகில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் இறந்துள்ள இந்த ஆண் மம்மியின் வயது 18 முதல் 21 வரை இருக்கலாம் என்று, முந்தைய சிடி ஸ்கேன் ஆய்வுகள் சுட்டிக்காட்டின.

ஒன்றுடன் ஒன்று சற்று சேர்ந்து காணப்படும் கொம்புடைய விலங்குகளின் பச்சைக்குத்துதல் அவை என்று அகச்சிவப்புக் கதிர் ஸ்கேன்கள் வெளிப்படுத்தும்வரை இந்த மம்மிகளின் கையிலுள்ள கருப்புப் பூச்சுகள் முக்கியத்துவம் இல்லாதவையாக கருதப்பட்டன. அதில் ஒன்று பெரிய கொம்புடைய காட்டு மாடு என்று விளக்கமளிக்கப்படுகிறது. இன்னொன்று வளைந்த கொம்பும், திமிலும் உடைய காட்டுமிராண்டி ஆடு போன்று தோற்றமளிக்கிறது.

பெண் மம்மியின் வலது தோள்பட்டையில் மேலிருந்து கீழாக 04 சிறிய எஸ் (S) வடிவ அலங்காரங்கள் வரையப்பட்டுள்ளன.

சடங்கு நடனத்தில் பயன்படுத்தப்படும் கழிகளைப் போன்ற அலங்கார வடிவமும் பெண் மம்மி மீது பச்சைக்குத்தப்பட்டிருந்தது.

இந்தப் பச்சைக்குத்திய வடிவமைப்புகள் – தோலின் கீழ் பதிந்துள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள நிறமி கரியைப் போலுள்ளது.

முன்னதாக, முற்காலத்தில் பெண்கள் மட்டுமே பச்சைக்குத்தும் பழக்கம் கொண்டிருந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் எண்ணியிருந்தனர்.

ஆனால், ஆண் மம்மியின் உடலில் பச்சைக்குத்தியிருப்பதை இப்போது கண்டறிந்திருப்பது, இரு பாலினத்தவரிடமும் இந்தப் பழக்கம் இருந்துள்ளதை காட்டுகிறது.

தகுதி நிலை, வீரம் மற்றும் மாந்திரீக அறிவை குறிப்பதாக பச்சைக்குத்துதல் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இன்று லக்சர் என்று அழைக்கப்படும் இடத்திற்கு 40 கிலோமீட்டர் தெற்காக, மேல் எகிப்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஜெபலெய்னில் இந்த மம்மிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த தனிநபர்கள் எந்தவொரு சிறப்பு தயாரிப்பும் இல்லாமல், ஆழமற்ற கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால், வெப்பம், உப்புத்தன்மை மற்றும் பாலைவனத்தின் வறட்சி ஆகியவற்றால் அவர்களின் உடலானது இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சுமார் கி.மு. 3100 ஆண்டில் முதலாவது பாரோ மன்னன் எகிப்தை ஒன்றிணைப்பதற்கு சற்று முன்னால், கி.மு. 3351 முதல் 3017 ஆண்டுகளுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கி.மு. 3,370 முதல் 3,100 வரையான ஆண்டுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படும் ‘ஓட்ஸி’ என்கிற அல்பைன் மம்மிதான் பச்சை குத்தப்பட்ட மிகவும் பழமையான ஆதாரம் ஆகும்.

ஆனால், இந்த மம்மி மீதான பச்சைக்குத்துதல், உருவ வடிவாக இல்லாமல், செங்குத்தான அல்லது கிடைமட்ட கோடுகளாக உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்