ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு

🕔 February 26, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார்.

“ஐக்கிய தேசியக்கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் முதற் கட்டமாக தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அதனை மேற்கொள்ளாமல் அபிவிருத்தியை காண முடியாது. விரைவில் பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த மக்களின் குரலுக்கு, அந்தக் கட்சியின் தலைமை செவி சாய்க்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயநலத்துடன் சிந்திக்கக் கூடாது. கட்சியைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.  கட்சிக்காக தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்.

வெற்றுக் கட்சியாகவே இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சி இருந்து வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனமடுவ தொகுதி அமைப்பாளராக தான் வகித்த பதவியினை அண்மையில் பாலித ரங்கே பண்டார ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்