அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர்

🕔 February 25, 2018

– மப்றூக் –

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர  10 பணக்கார அரசியல்வாதிகளில்  ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும், அவர்களின் பெயர்களுக்கு முன்னால் குறிப்பிடப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, 09ஆவது பணக்காரராக அந்தச் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரின் சொத்து மதிப்பானது, 09 லட்சம் அமெரிக்க டொலர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி செய்தியை எந்தவித கேள்விகளுக்கும் உட்படுத்தாமல், சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான செய்திகளை வெளியிடுபவர்கள், குறித்த கணக்கெடுப்பை நடத்தியவர்கள் யார் அல்லது எந்த அமைப்பு என்பதை, ஆராய்ந்து தெரியப்படுத்துதல் வேண்டும். அவ்வாறான தகவல்களற்ற, இந்த வகைச் செய்திகள் ஏற்றுக் கொள்ளத்தகாதவையாகும்.

உண்மையாக, இந்தச் செய்தியின் பின்னணியில் ஓர் அரசியல் உள்ளதை, விபரம் உள்ளோர் புரிந்து கொள்வார்கள். அதேவேளை, தகவல்களை தட்டையான பார்வையுடன் நோக்குகின்றவர்களுக்கு மேற்படி செய்தியானது ஆச்சரிமானதாகவே இருக்கும்.

‘ஒரு வாத்தியாராக இருந்து கொண்டு, அந்தச் சம்பளத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அதாஉல்லா எனும் நபர், அரசிலுக்கு வந்த பிறகு – இலங்கையில் 09ஆவது பணக்காரராகும் நிலைக்கு சம்பாதித்திருக்கிறார். அரசியலில் நேர்மையாக இருந்தால், இந்தளவு சம்பாதித்திருக்க முடியாது. ஊழல் செய்திருந்தால் மட்டுமே அவரால் இந்தளவு பணம் சம்பாதித்திருக்க முடியும். ஆகவே, அதாஉல்லா ஓர் ஊழல் பேர்வழி’ என்கிற ஒரு பிரசாரத்தைத்தான், மேலுள்ள செய்தி — மறைமுகமாகச் செய்வதற்கு முற்படுகிறது.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் உண்மையான சொத்து விபரம் என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால், மேலுள்ள செய்தியில் அவருடைய சொத்து மதிப்பு 09 லட்சம் டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடத்தில்தான் செய்தியை எழுதிய திருடன் பிடிபடுகின்றான்.

இன்றைய சந்தைப் பெறுமதியின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 155 ரூபாய் 28 சதமாகும்.

அவ்வாறாயின், 09 லட்சம் அமெரிக்க டொலர் என்பது, 13 கோடியே 97 லட்சத்து 51 ஆயிரத்து 552 ரூபாய் 80 சதமாகும். அண்ணளவில் 14 கோடி ரூபாய் எனலாம்.

இதன்படி, 14 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை வைத்திருக்கும் ஒருவரை இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளில் 09ஆவது பணக்காரர் என – மேற்படி செய்தி கூறுகிறது.

இது கோமாளித்தனமாகும்.

அதாஉல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றிலேயே, 14 கோடி ரூபாயை விடவும் பல மடங்கு சொத்துக்களை வைத்திருக்கும் பல போடியார்கள் இருக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், இலங்கை அரசியல்வாதிகளில் 09ஆவது பணக்காரர் என்கிற தலைப்பினை அதாஉல்லாவுக்குக் கொடுத்துள்ள மேற்படி செய்தியானது, அவருடைய சொத்து மதிப்பைக் குறிப்பிட்டதன் மூலமாக, அவரை ‘பிச்சைக்காரராக’ மாற்றியுள்ளது.

ஆகவே, ஒரு செய்தியை நம்புவதற்கு முன்னர், அதில் சொல்லப்பட்டுள்ள இது போன்ற விடயங்களையாவது கணக்கிட்டுப் பார்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ‘மிளகாய்’ அரைப்பதற்கு மட்டுமே பலரின் தலைகள் பயன்பட்டுக் கொண்டிருக்கும்.

பிற்குறிப்பு: இலங்கையின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராக அதாஉல்லா இருக்கலாம் என்கிற ஊகத்தை, இதன் மூலம் நாம் மறுக்க முயற்சிக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்