அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு

🕔 February 22, 2018

மைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சட்டம் – ஒழுங்கு, நிதி மற்றும் முதலீட்டு அமைச்சுக்களை, தற்போது வழங்கியுள்ளவர்களுக்கே தொடர்ந்தும் வழங்குமாறு பிரதமர் நேற்று புதன்கிழமை விடுத்த கோரிக்கையினையே, ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மூவரிடமுள்ள அமைச்சுப் பதவிகளை மீளப்பெற்று, ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இளம் அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி மூன்று அமைச்சர்களில் ஒருவர் மீது ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகவும் மேற்படி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பெருந்தெருக்கள் அமைச்சராக மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ள போதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஆயினும், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு பிரமர் விரும்பவில்லை என தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்