பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன்

🕔 February 21, 2018
பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில் வழங்கப்படவுள்ளன.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், மேற்படி கலவரத்தில் சொத்துக்களை இழந்த நூற்றுக்கண்கானோருக்கு இழப்பீட்டினை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைய சொத்துக்களை இழந்தவர்களுக்கான நஷ்டஈட்டினை வழங்கவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அளுத்கம கலவரம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தயாரித்த விசேட அமைச்சரவைப் பத்திரம் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்;

“அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014.06.15 மற்றும்  2014.06.16 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, முறையான இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அவ்வப்போது பேசப்பட்டாலும் தெளிவான – உறுதியான முயற்சிகள் எதுவும் முஸ்லிம் தரப்பால் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஆயிரம் நாட்களைக் கடந்தும் கலவரத்தில் மரணமடைந்தவர்களது குடும்பங்களுக்கோ, காயமடைந்தவர்களுக்கோ இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன. பின்னர், இவ்விடயம் சம்பந்தமாக நான் அதிக கவனம் செலுத்தி தகவல்களை திரட்டி நாடாளுமன்றத்தில் காரசாரமாக உரையொன்றினை கடந்த 2017 மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆற்றியிருந்தேன்.

அதனையடுத்து, இழப்பீடு சம்பந்தமாக அமைச்சரவைப் பத்திரமொன்றை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க REPPIA பணிப்பாளர் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு ராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளரினால் அமைச்சரவைப் பத்திரம் கடந்த 2017 ஜுலை 24ஆம் திகதி தயார் செய்யப்பட்டு, அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக 2017 ஆகஸ்ட் 22ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது அதற்குரிய அனுமதியினை அமைச்சரவை வழங்கிய போதிலும் அதற்கான நிதி அண்மையிலேயே ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், தேர்தல் காலம் என்பதால் அதனை வழங்காது தேர்தலுக்கு பின்னர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, இதற்கான ஏற்பாடுகளை தற்போது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு முன்னெடுத்துள்ளது. ஒருவாரத்துக்குள்  முதற்கட்ட நிதித்தொகையினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பணிப்புரைக்கமைய கலவரத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்