விமல் வீரவங்சவின் கல்வித் தகைமை; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் ராஜித சேனாரத்ன

🕔 February 19, 2018

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

அதேவேளை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில், அவருடைய சகோதரியின் மகளின் திருமணத்தை அரச பணத்தில் நடத்தியாகவும், அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டினார்.

“பிச்சைக்காரர்களான இந்த முன்னாள் அமைச்சர்கள் தற்போது தமது வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, அரசாங்கத்தை மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

அனைத்து திருடர்களும் கடைசியில் தாம் தப்பித்துக்கொள்வதற்காக, தேசப் பற்றை ஆடையாக அணிந்து கொள்கின்றனர்” எனவும் அமைச்சர் விமர்சித்தார்.

இதன் போது குறுக்கிட்ட விமல் வீரவங்ச, தன் மீது சுமத்தும் குற்றச்சாட்டை நாளை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன; கடந்த அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில், இதற்கான சாட்சியங்களை சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளதாகவும், சபை குறிப்பில் அவை இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, 10ஆம் வகுப்பு வரை மட்டும் படித்த விமல் வீரவங்சவுக்கு தொழிற்நுட்பம் தெரியாது எனவும் அமைச்சர் கூறினார்.

இதனையடுத்து வெகுண்டெழுந்த விமல் வீரவங்ச அதனையும் முடியுமானால் நிரூபித்து காட்டுமாறு சவால் விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்