வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை, சபையின் தலைவராக நியமித்தல்; குழப்பங்களும், தெளிவும்

🕔 February 16, 2018
– வை.எல்.எஸ். ஹமீட் –

பிரச்சினை: சரத்து 66B(1) இல் elected and returned என்ற சொற்பதம் பாவிக்காமல் ‘elected’ என்ற சொற்பதம் மாத்திரமே பாவிக்கப்பட்டிருப்பதால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே மேயராக/ தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதாகும்.

Act No 22 of 2012: s 65B இல் வட்டாரத்தில் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு ‘elected’ என்ற சொல்லும்  நியமிக்கப்படுகின்றவர்களுக்கு ‘returned’ என்ற சொல்லும் பாவிக்கப்படுகிறது.

அதேபோல் 66(1) இலும் அவ்வாறே பாவிக்கப்படுகின்றது.

அதன்பின் s 66(1) Para (a) இல் elected or returned என்ற இரு சொற்களையும் குறித்த உள்ளூராட்சி சபையின் அங்கத்தவர்களை பிரசுரிப்பதற்கான அறிவித்தல் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது. இங்கு ‘or’ என்ற சொல் உண்மையில் ‘ and’ என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படுகின்றது.

66B(2) இல், தேர்தல் ஆணையாளர் தெரிவுசெய்யப்பட்டவர்களின் (elected) பெயர்களை  வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும்; என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இங்கு returned என்ற சொல் விடுபட்டிருக்கின்றது. ஆனால் தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும்தான் தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அவர்கள் சபை அங்கத்தவராக முடியாது.

Act No 16 of2017: s 28, ஒவ்வொரு கட்சியும் இரண்டு வேட்புமனுக்கள் தெரிவுசெய்யப்படுவதற்காக (for the purpose of Election) சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதன்மூலம், நியமிக்கப்படுபவர்களும் தெரிவுசெய்யப்படுபவர்களே என்ற அர்த்தம் கொடுக்கப்படுகின்றது.

பிரச்சினைக்குரிய 66B(1) இற்கு மீண்டும் வருவோம். இங்கு, தெரிவுசெய்யப்பட்ட (elected) அங்கத்கவர்களை ஆணையாளர் வர்த்மானியில் பிரசுரித்ததன் பின் 50% அல்லது அதற்குமேற்பட்ட ஆசனங்களைப்பெற்ற கட்சி/ சுயேட்சைக் குழு தனது ‘அங்கத்தவர்களிலிருந்து’ மேயர்/பிரதி மேயரைத் தீர்மானிக்க வேண்டும். (members) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

ஒன்று: ஆணையாளர் வர்த்தமானியில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்களை மாத்திரம் பிரசுரிப்பதில்லை. நியமிக்கப்பட்டவர்களையும் சேர்த்துத்தான் பிரசுரிப்பார். எனவே, elected என்ற சொல் தெரிவு செய்யப்பட்டவர்களையும்தான் குறிக்கின்றது. மேலே குறிப்பிட்டதற்கு மேலதிகமாக, இன்னும் சில இடங்களில் elected என்ற சொல் நியமிக்கப்பட்டவர்களையும் குறிப்பதற்குப் பாவிக்கப்படுகின்றது. விரிவு கருதி அவை தவிர்க்கப்படுகின்றது.

இரண்டு: இங்கு மேயர்/பிரதி மேயரைத் தெரிவுசெய்வது சபை அங்கத்தவர்களுக்குள்ளிருந்து (from among members).

Municipal Councils ( Amendment) Act, No 20 of 2017 s 5(1)

இந்த சட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்கள் 60% வட்டாரத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் (elected and returned) என்றும் 40% நியமிக்கப்பட்டவர்கள் (elected and returned) என்றும் குறிப்பிடப்படுகின்றது. இங்கு இரண்டு வகையான தெரிவிற்கும் elected என்ற சொல் பாவிக்கப்படுவதன் மூலம், நியமிக்கப்படுபவர்களும் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்ற பதத்திற்குள் உள்வாங்கப்படுவது தெளிவாகின்றது.

இதற்கான காரணம் நியமிக்கப்படுபவர்களின் பெயர்களும் ஏற்கனவே பட்டியலில் உள்வாங்கப்பட்டு அதுவும் மக்கள் முன்னால் சமர்ப்பிக்கப்படுகின்றது. மக்கள் குறித்த கட்சிக்கு/ சுயேட்சைக் குழு விற்கு வாக்களிக்கும்போது அவர்களையும் மனதில் வைத்தே வாக்களிக்கின்றார்கள் என்பதே சட்டத்தின் பார்வையாகும்.

அதேநேரம் சபை அங்கத்தவர் என்பது இந்த இருவகை உறுப்பினர்களையுமே குறிக்கின்றது என்பது இங்கு தெளிவாகின்றது. அந்த சபை அங்கத்தவர்களிற்குள்ளிருந்துதான் மேயரோ, தவிசாளரோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளோ தெரிவுசெய்யப்பட வேண்டும். எனவே, யாரையும் மேயராக தெரிவுசெய்யலாம் என்பது தெளிவாகும்.

இதேபோன்று, எந்த அணியும் 50% பெறாதபோது மற்றும் வெற்றிடம் ஏற்படும்போதெல்லாம் அங்கத்தவர்களிற்குள்ளிருந்து மேயர்/பிரதி மேயர், தவிசாளர்/பிரதி தவிசாளர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றே சட்டம் கூறுகின்றது மாறாக எந்தவொரு இடத்திலும் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களுக்குள்ளிருந்து (from among elected members) என்று குறிப்பிடப்படவில்லை.

மட்டுமல்லாமல் அவ்வாறு – ஒரு வேறுபாடு இருந்தால், அது இரண்டு வகையான அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக உள்ளூராட்சி சபை அமைவதாக பொருள் பட்டுவிடும். அது அடிப்படை உரிமைக்கு மாறானதாகும். அல்லது சில நாடாளுமன்றம் இருப்பதுபோல் மேல்சபை, கீழ்சபை என்ற இரண்டு வகையான சபைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இங்கு வகைப்படுத்தப்படவில்லை. மட்டுமல்லாமல் அவ்வாறாயின் அதை ஒரே தேர்தலினூடாக செய்வதில் பிரச்சினை எழும்.

எனவே, யாரும் குழப்பமடையத் தேவையில்லை. தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கட்கும் நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கட்கும் சட்டத்தின் பார்வையில் எந்த விடயத்திலும் எந்த வேறுபாடுமில்லை.

இதில் தெளிவின்மை காரணமாக அதிகாரிகளால் ஏதாவது குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். ஆனால் அவ்வாறான குழப்பங்கள் எதுவும் வரமாட்டாது என நம்புகிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்