நாட்டின் அரசியல் தலைகீழாக புரளும் நிலை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியே கவலைப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது: ஹக்கீம்

🕔 February 14, 2018
தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறையில் தமது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களின் தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்‌றனர். இந்நிலையில் ஆட்சிமாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;

ஜனாதிபதியை இன்று காலை சந்தித்த நாடாளுமன்ற குழுவினர்கள் சூடுபிடித்துள்ள சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.

தங்களது கட்சி தொடர்ந்து வெற்றிபெற்று வந்த இடங்களில், புதிய தேர்தல் முறையினால்  தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, மாகாணசபை தேர்தலில் விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

ஆட்சிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று மாலை 06 மணிக்கு பிரதமர் தலைமையிலும், 08 மணிக்கு ஜனாதிபதி தலைமையிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்றுகூடுகின்றனர். இந்த சந்திப்பின் பின்னர் எதிர்பாராத மாற்றங்கள் நாட்டில் நிகழலாம். நாட்டின் தேசிய அரசியலை தலைகீழாக திருப்பிப்போடும் நிகழ்வுகள்  நடைபெறுவதற்கான நிலைவரங்கள் உள்ளன. இருப்பினும் நல்லாட்சி தக்கவைத்துக்கொள்வதற்கான முஸ்தீபுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

மஹிந்த ராஜபக்ஷ அணி பெற்றுள்ள வெற்றி தேசிய அரசியலில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை தேசியக் கட்சிகள் தங்களுக்குள் மாறி மாறி விரல்சுட்டிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை விலைபேசுகின்ற அளவுக்கு நிலவரம் மாறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கவலை தெரிவித்தார். ஒரு ஜனாதிபதியே கவலைப்படுகின்ற அளவுக்கு அரசியல் நிலவரம் மாறிவருகின்றது.

அரசாக்கத்துக்குள் நிலவும் முரண்பாடுகளை களைந்து, இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நல்லாட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நாம் செய்யவேண்டும். இதன்மூலம் இதன் பின்புலத்திலுள்ள சக்திகளுக்கு தீனி போடாமல் பாதுகாக்க முடியும்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்