கூட்டாட்சி அமைக்க, மு.கா. தலைவர் விடுத்த அழைப்பை, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரிப்பு

🕔 February 12, 2018

 முன்ஸிப் அஹமட், எம்.ஐ.எம்.அஸ்ஹர்  –

ல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு வருமாறு, சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவுக்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் விடுத்த அழைப்பினை நிராகரிப்பதாக, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் தலைவர் எம்.எச்.எம்.நௌபர்  இன்று திங்கட்கிமை மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதற்கும், சுயேட்சைக் குழுவுக்கு கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை வழங்குவதற்கும், தான் தயாராகவுள்ளதாகவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்த அழைப்பினையே, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் தலைவர் நிராகரித்துள்ளார்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, சாய்ந்தமருது பள்ளிவாசலின் வழி நடத்தலுக்கிணங்க, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்று தோடம்பழ சின்னத்தில் களமிறக்கப்பட்டது.

இந்த சுயேட்சைக் குழுவினை எதிர்த்து, சாய்ந்தமருதில் ஏனைய அரசியல் கட்சிகள் எவையும் வேட்பாளர்களை களமிறக்காத நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் சாய்ந்தமருதில் வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தது.

இந்த நிலையில், நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்படி, சாய்ந்தமருதின் அனைத்து வட்டாரங்களையும் பள்ளிவாசல் வழிநடத்திய சுயேட்சைக் குழு கைப்பற்றியதோடு, மொத்தமாக 09 ஆசனங்களை வென்றெடுத்தது.

இதேவேளை, கல்முனை மாநகரச சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ், நடைபெற்ற தேர்தலில் 12 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க, 41 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகரசபையில், எந்தவொரு தரப்பும் தனித்து ஆட்சியமைக்க முடியாததொரு நிலைவரம் உருவாகியுள்ளது.

இதனையடுத்தே, கல்முனை மநகர சபையில் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு ஆட்சியமைப்பதற்கு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளதாக, மு.காங்கிரசின் தலைவர் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த அழைப்பினையே, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்