அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு

🕔 May 27, 2015

Thona - 01– எம்.வை. அமீர் –

சாய்ந்தமருது தோணாவினை புனரமைப்புச் செய்து – அழகு படுத்தும் நடவடிக்கை, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு, அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்து, கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

மேற்படி கடிதத்தினை, காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குநரும்,  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி மதனியிடம் அப்பகுதி மக்கள் நேற்று செவ்வாய்கிழமை சாய்ந்தமருது தோணா புனரமைப்பு நடைபெறும் இடத்தில் வைத்து – அமைச்சர் ஹக்கீமிடம்  கையளிப்பதற்காக ஒப்படைத்தனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த, தோணா புனரமைப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு காரணமான, அமைச்சர் ஹக்கீமுக்கு  நன்றி தெரிவிப்பதோடு, தோணா புனரமைப்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக நெருக்கமான சனத்தொகையைக்  கொண்ட சாய்ந்தமருது பிரதேசத்தினை ஊடறுத்துச்செல்லும் தோணா என்று அழைக்கப்படும் நீர் நிலையானது, நீண்ட காலமாக – முறையான முகாமைத்துவம் செய்யப்படவில்லை. இதனால்,  இந்தத் தோணா – பாதுகாப்பற்ற பகுதியாகவும், சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலான இடமாகவும் காணப்பட்டது.

எனவே, குறித்த தோணாவை சுத்தம் செய்து – அதனை இப்பிராந்திய மக்களுக்குப் பயன்தரும் இடமாக  மாற்றித்தருமாறு இப்பகுதி மக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மேலும், மழைக்காலங்களிலும் – வயலில் வடிச்சல் திறக்கும் வேளைகளிலும்,  இலகுவாக நீர் வடிந்து செல்லக்கூடியவாறு இந்தத் தோணாவினை புனரமைப்புச் செய்ய வேண்டிய தேவையும் இனங்காணப்பட்டது. இதேவேளை, தோணாவினைச் சுற்றி பாதுகாப்பு வேலி இல்லாததன் காரணமாக, அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தருமாறும் இப்பிரதேச மக்கள்  வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதற்கிணங்க, காலத்துக்குக் காலம் – இத்தோணாவினை சிறிய அளவில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கோள்ளப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட புனரமைப்பு நடவடிக்கைகள்  இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்  ரஊப் ஹக்கீம் –  நகர அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றதன் பின்னர் – சாய்ந்தமருது தோணாவினை புனரமைத்துத் தருமாறு அப்பகுதியிலுள்ள பொது அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிணங்க, அமைச்சர் ரஊப் ஹக்கீமின் உத்தரவுக்கிணங்க, அவரின்  அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் – சாய்ந்தமருது தோணவினை புனரமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இப்புனரமைப்பு நடவடிக்கையின் முதற்கட்ட வேலைகளுக்காக 03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Thona - 02

தோணா – சுத்தப்படுத்தப்படும் காட்சி

Thona - 03

தோணவிலிருந்த கழிவுகள் மற்றும் ஆற்றுவாழைத் தாவரம் போன்றவை அகற்றப்பட்ட பின்னரான தோற்றம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்