வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட்

🕔 February 5, 2018

– றிசாத் ஏ. காதர் –

க்கள் மரணித்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே ரஊப் ஹக்கீம் உள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தொடரந்து அவர் உரையாற்றுகையில்;

“இம்மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதனை உள்ளத்திலே போட்டு அதற்கான தீர்வை காணுகின்ற எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கின்ற ஒரு தலைமையாக மு.கா.தலைமை மாறியுள்ளது.

ஒலுவில் மண்ணில் இந்தத் தேர்தலிலே எமது சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை தாருங்கள் என்று கேட்கின்றோம்.
ஒலுவில் பிரதேசம் நீண்டகாலமாக பல துன்பங்களை துயரங்களை சுமந்துகொண்டிருக்கிறது. 30 வருடங்களாக மு.காங்கிரசுக்கு வாக்களித்து வந்திருக்கினறீர்கள்.

பெருந்தலைவர் அஷ்ரப் இந்த ஒலுவில் மண்ணை சாதனை மிக்க பகுதியாக மாற்றுவதுக்கு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைளை திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பிறகு இந்தப்பிரதேசம் – இருந்ததையும் இழந்த பிரதேசமாக இன்று காட்சி தருகின்றது. மீனவர் சமூகம் கஷ்டப்படுகின்றது. இங்குள்ளவர்களின் காணிகள் பறிபோயுள்ளன.

இப்பிரதேச மக்கள் தங்களது வாக்குரிமையினை கடந்த பிரதேச சபைத் தேர்தலிலே ஒட்டுமொத்தமாக மு.காங்கிரசுக்கு வழங்கினீர்கள். கடந்த மாகாணசபைத் தேர்தலிலே ஒட்டுமொத்த வாக்கை கொடுத்து முதலமைச்சர் பதவியைக்கூட பெற்றுக்கொடுத்தீர்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே அதிகபட்ச ஆதரவினைக் கொடுத்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து கொடுத்துள்ளீர்கள். இவ்வளவு காலமும் வாக்களிக்கின்ற சமூகமாக இருக்கின்ற இங்குள்ள மக்களுக்கு, என்ன செய்யவேண்டும், இங்கு என்ன பிரச்சினை இருக்கின்றதன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றுக்கான எந்த திட்டமிடலும் மு.காங்கிரசிடம் இல்லை. இங்கு வருகின்ற அரசியல்வாதிகள் எல்லோரிடமும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு அலைகின்ற நிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

மு.காங்கிரசில் யார் இருந்தாலும், யார் வெளியேறினாலும் ஹக்கீமுக்கு கவலையில்லை. நப்ஸ் கேட்கிறது தாருங்கள் என்று கேட்டுப் பெற்றுக்கொண்ட தலைமைப்பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலே மிகவும் கண்ணும் கருத்துமாக ஹக்கீம் இருந்து வருகின்றார்.

ஹசனலிக்கு பிறகு ஜவாத் வெளியேறியிருக்கின்றார். அந்தக்கட்சியில் அதாஉல்லா தொடக்கம் ஜெமீல் வரைக்கும் வெளியேறிவிட்டனர்.

இந்தத் தேர்தலில் கூட தேசியப்பட்டியல் ஒன்றினை அவசர அவசரமாக ராஜினாமா பண்ணச் செய்து அட்டாளைச்சேனைக்கு கொடுத்துள்ளார். ஏன் அவ்வாறு செய்கின்றார். இதனை நாங்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். எமது கட்சி இந்தத் தேர்தலிலே இங்கு வந்து போட்டியிடுகின்ற அச்சத்தின் காரணமே அவ்வாறு செய்துள்ளார்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுப்பேன் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு இருக்கின்றது. அது நேற்று செய்யப்படவேண்டியது அல்ல. எப்போதோ செய்திருக்க வேண்டியது. ஆனால் தேர்தலுக்கான அரைவாசிக் காலத்தில் அவசரமாக அவ்வாறான ஒரு முடிவினை எடுத்திருக்கின்றார். ஒரு முஸ்லிமுக்குரிய பண்புகள் இருக்கின்றன. ஒன்றை சொன்னால் செய்ய முடியுமாகவிருந்தால் சொல்லவேண்டும். முடியாவிட்டால் நாங்கள் அதனை சொல்லக்கூடாது. சொல்லியும் செய்யமுடியாத விடயங்களை கூறி எமது சமூகத்தை ஏமாற்ற முடியாது.

பெருந்தலைவர் அஷ்ரப் மரணித்தபோது 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல லட்சங்களைக் கொண்ட வாக்கு வங்கி மற்றும் 20க்கும் மேற்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் அதிகப்படியான உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தோடு, ஹக்கீம் இந்தக் கட்சியைப் பொறுப்பேற்றார்.

தலைவர் விட்ட இடத்திலிருந்து இந்த சமுதாயத்தை பாதுகாப்பதுக்கான வேலைத்திட்டங்களையோ, தலைவர் தொட்டுச் சென்ற வேலைத்திட்டங்ளையோ தொடர வேண்டும் என்கிற எண்ணம் ஹக்கீமிடம் இல்லை. நமது நாட்டிலே வாழுகின்ற 20இலட்சம் முஸ்லிம் மக்களின் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் அபிவிருத்திக்கென எந்தவொரு திட்டங்களையும் ஹக்கீம் முன்னெடுக்கவில்லை.

காலத்துக்க காலம் மக்களின் வாக்குகளை எடுத்துக்கொண்டு, வாக்குறுதியளிப்பது மட்டுமே ஹக்கீமுக்கு தொழிலாகிப் போய்விட்டது. பெருந்தலைவருடைய படத்தையும், அந்தப்பாடலையும், போட்டு மேடையிலே நின்று கைதட்டினால் அதற்கு ஏமாந்து போகின்றவர்களாகவும், வாக்களிக்கின்றவர்களாகவும் மக்களும் மாறியிருக்கின்றோம்.

இதிலிருந்து விடுபட்டு, எமக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்குங்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்