கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி

🕔 February 4, 2018
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பெளசி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்‌ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்;

“கடந்த தேர்தலில் எங்களுக்கு சாய்ந்தமருதில் வழங்கப்பட்ட வாக்குகள் இந்த முறையும் கிடைக்கும். இந்தமுறை மேயர் பதவியை தந்துததான் சாய்ந்தமருது மண்ணை கட்சி அலங்கரிக்கும். சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படும் வரை மேயர் பதவி தொடரும். அதை யாரா லும் தடுக்க முடியாது. கல்முனையிலுள்ள யாரும் அதை எதிர்த்து பேசமாட்டார்கள். அதுவரை இந்த மாநகரம் கல்முனை – சாய்ந்தமருது மாநகரம் என பெயர் மாற்றப்படும்.

இந்த மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு நான் தயாராகிக்கொண்டிருக்கிறேன். அதில் 200 மில்லியன் ரூபாவை எடுத்து, சாய்ந்தமருது பிரதேச செயலக கட்டிடத்தை நூலக வளாகத்தில் அமைக்கவுள்ளேன். இந்த வேலைத்திட்டங்களை இந்த வருடமே நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக நான் வாக்குறுதி வழங்கியிருக்கிறேன். அந்த வாக்குறுதியை என்றைக்கும் நான் மறந்து செயற்பட்டதில்லை. இடைநடுவில் நெருக்கடிகள் ஏற்பட்டபோது, சாய்ந்தமருது சார்பில் பள்ளிவாசல் நிர்வாகம் எங்களுடன் கதைத்தது. சாய்ந்தமருதிலுள்ள கட்சி முக்கியஸ்தர்கள் என்னிடம் வந்து பாரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தனர். சாய்ந்தமருதுக்கு நான் கொடுத்த வாக்குறுதியில் ஒரு துளியேனும் நான் மாறவில்லை என்பதை சொல்லியாக வேண்டும். எந்த பிரதேசத்துக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வைக் கொடுக்கும் வரை சாய்ந்தமருது மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் தவறு எங்கு நடந்திருக்கிறது என்பதை முதலில் பார்க்கவேண்டும். தவறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலா, அல்லது பள்ளி தலைமையிலா, அல்லது ஏனைய அமைச்சர்கள் பொறுப்பாளர்களா, அல்லது எமது பிரதியமைச்சர் பொறுப்பாளரா என்று இந்தப் பிரச்சினையை வெவ்வேறு கோணங்களில் பார்க்கலாம். ஆனால், ஒவ்வொரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையைப் பார்ப்பவர்கள் தங்களது சொந்த அரசியலை வைத்து இதற்கு வியாக்கியானம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கல்முனையைச் சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கிழக்கு மாகாண சபையில் பிரேரணையை கொண்டுவந்து உரையாற்றும்போது, எந்தக் காரணம்கொண்டும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்க விடமாட்டேன். அவ்வாறு வழங்கினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்று கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியையும் மீறிப் பேசினார். இப்போது அவர் மயில் கட்சியிடம் போய் சரணடைந்திருக்கிறார்.

உள்ளூராட்சி மன்ற வியடத்தில் கட்சியை அழிப்பதற்கான சதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஒரு நாணத்தின் இரு பக்கங்கள் போல சாய்ந்தமருதிலும், கல்முனையிலும் இப்படியான பினாமிகள் இருந்துகொண்டிருக்கின்‌றனர். மர்ஹூம் அஷ்ரஃப் கல்முனை மாநகரில் அசைக்கமுடியாத இயக்‌கமாக முஸ்லிம் காங்கிரஸை நிலைநிறுத்தியிருக்கிறார். அப்படியான கட்சியை எந்த பினாமிகள் வந்தாலும் அழிக்கமுடியாது. அவரது காலத்தில் சவாலாக இருந்த மருதமுனை கூட இப்போது முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்‌ளது.

சுயநல அரசியலுக்காக இந்த விடயம் பூதாகரமாக மாற்றப்பட்டுள்ளது. சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி வழங்கப்பட்ட விவகாரத்தில் பொறுப்புதாரி நான்தான். ஆனால், இந்தப் பொருத்தம் கொடுக்கவேண்டி ஏற்பட்டதற்கு மூலகாரணம் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜெமீல். நிசாம் காரியப்பருக்கு ஆதரவாக நின்ற காரணத்துக்காக ஜெமீலின் நிறுவனம் உடைக்கப்பட்டது. இன்று ஜெமீல் நடத்துகின்ற கூத்தையே அன்று சிராஸ் மீராசாஹிப் செய்தார்.

இரு துருவங்களான சிராஸும், ஜெமீலும் இன்று கட்சியை அழிப்பதற்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அரசியல் அந்தஸ்து கொடுத்த இயத்தை அழிப்பதற்கு இன்று விலைபோயிருக்கிறார்கள். தங்களுக்கு பதவிகள் இல்லை என்றபோது இந்த பித்தலாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் பதவிகளை வகித்துவந்த சாய்ந்தமருதும் கல்முனையும் கட்சியின் கோட்டைகள்.

சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் தருவோம், பிரதேச சபை தரமாட்டோம் என்று மறைந்த தலைவர் அஷ்ரஃப் சொல்லியிருந்தார். கல்முனை மாநகரை ஒன்றாக வைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படிச் சொன்னார். அவரது பேச்சையும் மீறி நாங்கள் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மாற்றமுடியாது. கட்சித் தலைமை கொடுத்த இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவேண்டும்.

புதிய தேர்தல் முறையினால் கல்முனை மாநகருக்கு ஆபத்து என்பதை காரணம்காட்டி இரண்டாக பிரிப்பதை கல்முனை மக்கள் எதிர்த்தனர். சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் இப்போதைக்கு வேண்டாம். ஆனால், தேர்தலுக்கு முன்னர் அறிவியுங்கள். அடுத்த தேர்தலில் கல்முனை மக்கள் கூறுவது சரியா, பிழையா என்று பார்ப்போம் என்று சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் சொன்னது. இந்த தேர்தலில் வாக்களித்து எங்களது ஆசனங்கள் ஆட்சியமைக்க போதுமானது என்பதை நிரூபிப்போம் என்று கூறினார்கள்.

ஆனால், அதற்கிடையில் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த விடயத்தை வேண்டுமென்றே குழப்பியடித்துவிட்டார். இதனால்தான் கல்முனையை நான்காக பிரிக்கின்ற பெரிய விபரீதம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கதைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த விடயத்தில் என்ன நடக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். விடயத்தை சிக்கலாக்கி என்னை நெருக்கடிக்களில் மாட்டப் போகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் இந்த விடயத்தில் கொஞ்சம் நிதானமாக நடந்திருக்கவேண்டும். தனியான உள்ளூராட்சிமன்றத்தை தலைவர் பெற்றுத்தருவதாக சொல்கிறார். அவரது பேச்சை நம்பி, கல்முனைக்கு பாதிப்பு வராது என்பதை தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எங்களுக்கு வாக்களித்து, புதிய தேர்தல் முறையில் பாதிப்பு வராது என்பதை ஆசன வித்தியாசத்தில் நிரூபித்துக்காட்ட பொறுமையோடு இருந்திருக்கலாம்.

தோடம்பழத்தை கொண்டுவந்து இந்த கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை பள்ளிவாசல் நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் அறிவில்லாதவர்களால், தூரநோக்க சிந்தனையற்றவர்கள் இன்று மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். சாய்ந்தமருதிலுள்ள இளைஞர்களையும் வாக்கு இல்லாத பிள்ளைகளையும் தவறான முறையில் வழிநடத்துகின்றனர். பொறுமை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் இன்று வன்முறைக் கலாசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனையிலிருந்து வந்தவர்களில் ஜவாத் மற்றும் அவரது சகோதரர்கள் நடந்துகொண்ட விடயம் இது திட்டமிடப்பட்ட ஒரு சதி என்பதை எடுத்துக்காட்டியது. ஒரு பக்கத்தில் சாய்ந்தமருதில் நெருக்கடி மறுபக்கம் கல்முனையில் என்று ஆரம்பித்த இந்த பித்தலாட்டத்தின் விளைவு இன்று கட்சியை கருவறுக்கின்ற சூழலுக்கு இட்டுத்தள்ளியிருக்கின்றது. இதற்கு தலைமை ஒருபோதும் பொறுப்பாகாது. சந்தர்ப்பவாத அரசியலுக்காக இதனை பயன்படுத்துகின்றனர்.

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முடியாது என்பதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தவறிழைத்தவிட்டது என்று மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர். இந்த நெருக்கடியான சூழலுக்குள் தீர்வுகாண்பதற்கு, சற்று பொறுமையாக இருக்குமாறு நான் சொல்லியும் கேட்காமல் நடத்திக்கொண்டிருக்கும் விபரீத விளையாட்டிலிருந்து சாய்ந்தமருது மண் தனிமைப்படுத்தப்படமால் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்