கல்முனை மாநகர சபையிலிருந்து, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்க முடியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

🕔 February 3, 2018

– மப்றூக் –

மாநகர சபையொன்றின் பிரதேசத்தைப் பிரித்தெடுத்து, பிரதேச சபையொன்றினை உருவாக்க முடியாது என்கிற சட்டம் தெரிந்திருந்த போதிலும், கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையொன்றினை பிரித்துத் தருவதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது மக்களிடம் பொய்  கூறினார் என்று, மு.காங்கிரசின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் நிசாம் காரியப்பர் தொடர்ந்து பேசுகையில்;

”சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தினர் தமக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, பைசர் முஸ்தபாவை அழைத்துப் பேசினார்கள். ஆனால், ஏன் அவர்கள் என்னை அழைத்துப் பேசவில்லை.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை தொடர்பில், ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தோம். அந்த இணைக்கப்பாட்டினை கெடுத்தவர் அமைச்சர் பைசர் முஸ்தபாதான்.

சாய்ந்தமருதுக்கு ஏன் பிரதேச சபை வேண்டும்?

சாய்ந்தமருது மக்கள் – வெறுமனே சாய்ந்தமருது பிரதேச சபையின் கீழிருக்க விருப்பமா? அல்லது ஒரு மாநகர சபையின் கீழ் இருக்க விருப்பமா என்று யோசிக்க வேண்டும்.

மாநகர சபையொன்றின் பிரதேசத்தைப் பிரித்தெடுத்து, பிரதேச சபையொன்றினை உருவாக்க முடியாது என பிரதேச சபை சட்டம் கூறுகிறது. அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இது தெரியும். ஆனாலும், கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையினை பிரித்துத் தருவேன் என்று, சாய்ந்தமருது மக்களிடம் அவர் பொய் கூறினார்.

எவ்வாறாயினும், மாநகரச சபையொன்றின் கீழுள்ள பிரதேசமொன்றை பிரித்து, நகரசபையாக்க முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்