ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு

🕔 February 2, 2018

– மப்றூக் –

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது தொடர்பில், கட்சியின் மூத்த பிரமுகரும், அரசியல் ஆய்வாளருமான அஷ்ஷேய்க் இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன், எழுதியுள்ள பதிவு ஒன்று குறித்து, ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் முன்வைத்துள்ள மாற்றுக் கருத்து தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மு.கா. தலைவரின் சகோதரர் ஹசீர்; தவறான தகவல்களை வெளியிடுவதன் மூலம், கட்சியின் வரலாற்றினை திசை திருப்ப முயற்சிக்கின்றார் என, அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அஷ்ஷேய்க் இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரசின் தற்போதைய தலைவர் ஹக்கீம், கட்சிக்குள் எப்போது இணைக்கப்பட்டார் என்பது குறித்து, இனாமுல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகையில்;

‘1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பொழுது, மு.காங்கிரசின் நிதித் தேவைகளுக்காக புகார்தீன் ஹாஜியாருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. புகார்தீன் ஹாஜியாரின் கம்பனியில், சட்ட ஆலோசகராக அப்போது பணியாற்றிய ரஊப் ஹக்கீம், நாடளுமன்ற உறுப்பினர் புகார்தீன் ஹாஜியாரின் பிரத்தியேக செயலாளராகவும் பணியாற்றினார்.

பின்னர் ரஊப் ஹக்கீமுடைய மும்மொழிப் புலமையை கருத்தில் கொண்டு, மு.காங்கிரசின் செயற்குழு செயலாளராக உள்வாங்கப் பட்டார்” என, குறிப்பிட்டுள்ளார்.

இதனை மறுக்கும் வகையில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர், இனாமுல்லாவின் பதிவுக்கு கருத்திட்டுள்ளார்.

அதில் ஹசீர் குறிப்பிடுகையில்; ‘இனாமுல்லா எழுதியுள்ளது பிழையான தகவலாகும்.
புஹார்தீன் ஹாஜியாருக்கு முன்னரே ஹகீமை, மு.காங்கிரசுக்குள் அஷ்ரப் உள்ளீர்த்து விட்டார். பின்னர் ஹகீம் மூலமாகத்தான் புஹார்தீன் ஹாஜியார் உள்வாங்கப்பட்டார். புஹார்தீன் ஹாஜியார் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, ஹக்கீம் ஒருபோதும் அவரின் பிரத்தியேக செயளாளராக பணி புரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹசீருடைய தகவல்களை, முஸ்லிம் காங்கிரசின் மூத்த பிரமுகர் சட்டத்தரணி அபுல் கலாம் மறுத்துப் பதிவிட்டுள்ளதோடு, மு.காங்கிரசின் வரலாற்றினை ஹசீர் அழிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அபுல் கலாம் மேலும் குறிப்பிடுகையில்; ‘ரஊப் ஹக்கீமை மு.காங்கிரசின் செயற்குழு செயலாளராக்குவதில் நான் முக்கியமானவராக இருந்தேன். அதேபோன்று, 2000ஆம் ஆண்டு ஹக்கீமை கட்சியின் தலைவராக்குவதிலும் முன்னின்று செயற்பட்டேன். ஆனால், ஹக்கீம் எனக்கு நன்றியற்றராகி விட்டார். அது வேறு கதை. ஆனால், வரலாற்றை ஹசீர் திசை திருப்ப வேண்டாம். நாங்கள் இறைவனின் உதவியால் இவற்றுக்கெல்லாம் சாட்சியாக இன்னும் உயிரோடு இருக்கிறோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

ஆக, மு.காங்கிரஸ் ஆரம்பித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தக் கட்சிக்குள் நுழைந்த ஹக்கீமை, கட்சியின் மிக மூத்த உறுப்பினராகவும், மூத்த உறுப்பினர்களையெல்லாம் ஹக்கீமுக்கு கனிஷ்டமானவர்களாகவும், ரஊப் ஹசீர் காண்பிக்க முயற்சித்தமை இங்கு அம்பலமாகியுள்ளது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்