மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு

🕔 February 2, 2018

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு தைரியமிருந்தால், தன்னுடன் ஒரே மேடையில் விவாதிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் சவால் விடுத்தார்.

ஏறாவூரில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார்.

மு.காங்கிரசுக்கு ரஊப் ஹக்கீம் செய்த துரோகங்களை ஒரு பட்டியலாக முன்வைத்து, அவருடன் ஒரே மேடையில் விவாதிப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் இதன்போது, பசீர் சேகுதாவுத் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒரே மேடையில் ஹக்கீமும் நானும் பேசுவதற்கு, ஹக்கீமுக்கு முடிந்தால் வரட்டும். அழ்ழாஹ்வின் மீது சத்தியமிட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நான் முன்வைப்பேன். அழ்ழாஹ் மீது சத்தியமிட்டு அந்தக் குற்றச்சாட்டுக்களை ஹக்கீம் மறுக்க வேண்டும்.

மு.காங்கிரசுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை நான் பட்டியலிடுவேன். தைரியமிருந்தால் மக்கள் முன்னிலையில் ஹக்கீம் அதை மறுக்க வேண்டும். விவாதிப்போம் வாருங்கள். எங்கு விவாதிப்பது என்றாலும் பிரச்சினையில்லை.

ஆனாலும், எனது ஊரான ஏறாவூரில் விவாதிப்பதென்றால் மிகவும் சந்தோசமாகும். இங்கு ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகிய இரண்டு பேர் ஹக்கீமை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் விவாதிப்பதற்கு அவர் வரவேண்டும்.

குற்றச்சாட்டுக்களை ஹக்கீம் ஒத்துக் கொண்டால், மு.காங்கிரசின் தலைமைத்துவத்திலிருந்து இறங்கிச் சென்று, அவரின் சொந்த வேலையைப் பார்க்க வேண்டும். எமது கட்சியை நாங்கள் மீட்டெடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள உன்னதமான ஒருவரை தலைவராக்குவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்