அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம்

🕔 January 26, 2018

– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம் சுமார் 15 வருடங்கள் தேசியப்பட்டியலின் பெயரைச்  சொல்லி, அட்டாளைச்சேனையை ஹக்கீம் ஏமாற்றி வந்த கசப்பான அனுபவங்களை, முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை ஆதரவாளர்கள் மறந்து விட்டதாக நடிக்க வேண்டியுள்ளது.

தேசியப்பட்டியல் என்கிற நம்பிக்கையினை ஊட்டி, மசூர் சின்னலெப்பையை மனதளவில் ஒரு நோயாளியாக்கியவர் ஹக்கீம் என்பதை, அட்டாளைச்சேனைக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியலால் மறைக்க வேண்டிய துரதிஷ்டம் அந்த ஊருக்கு நேர்ந்துள்ளது.

ஓர் ஊருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று கிடைப்பதென்பது, அந்த ஊர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், அந்தப் பதவி மூலம் – அந்த ஊர் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறது என்பதை வைத்தே, அந்த மகிழ்ச்சி நிரந்தரமாகும்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வழங்கப்பட்டால், அது – ஏ.எல்.எம். நசீருக்கே வழங்கப்படும் என்பதையும், வழங்கப்பட வேண்டிய ‘நியாயங்களை’யும், பல தடவை ஊடகங்கள் வாயிலாக நாம் வெளிப்படுத்தி இருக்கின்றோம்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அட்டாளைச்சேனையில் நசீருடன் போட்டியிட்டு வந்த சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் மற்றும் பழீல் பி.ஏ. ஆகியோர், உள்ளுர் அரசியலை தலைமையேற்று நடத்துகின்ற அளவுக்கு தம்மை உயர்த்திக் கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆனால், அரசியலுக்குள் வந்து 06 வருடங்களில் – நசீர் தன்னை ‘எல்லா’ வகையிலும் நன்றாகவே வளர்த்துக் கொண்டார்.

எனவே, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கினால், அந்த ஊரிலுள்ள முஸ்லிம் காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளர்களில் நசீர்தான் – அதைப் பெறுவதற்குப் பொருத்தமானவராகத் தெரிகின்றார்.

ஆனால், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நசீருக்கு தேசியப்பட்டியல் கிடைத்து விடுவதால் மட்டும், அட்டாளைச்சேனை பெருமையடைந்து விடும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமான எண்ணமாகும்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இரண்டரை வருடங்கள் நசீர் பதவி வகித்தார். ஆனாலும், சொல்லிக் கொள்ளும் வகையில் அவரின் ஊரான அட்டாளைச்சேனையில் எந்தவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நசீர் பதவி வகித்த காலப்பகுதியில், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் ஒரு தடவை மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வந்தது. வேறு வைத்தியசாலைகளிலிருந்து அட்டாளைச்சேனை வைத்தியசாலைத் தரப்பினர், கடனுக்கு மருந்துகளைப் பெற்றார்கள். இது குறித்து ‘புதிது’ செய்தித்தளத்தில், ‘சுகாதார அமைச்சரின் ஊரில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு’ எனும் தலைப்பில் செய்தியொன்றினையும் எழுதியிருந்தமை, இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

மட்டுமன்றி, சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக அப்போது சுகாதார அமைச்சராகவிருந்த நசீர், பலரிடம் பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டுமன்றி, அவருடைய கட்சிக்காரர்களும் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.

மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கான நியாயங்கள் நசீரிடம் இருக்கலாம். தனது பெயரைப் பாவித்து தன்னுடன் இருந்த சிலர், தொழில் வாய்ப்புத் தருவதாக பணம் பெற்றுக் கொண்டார்கள் என்று, ஒரு தடவை நசீர் நம்மிடம் கூறியிருந்தமையையும் இங்கு பதிவு செய்ய முடியும்.

எவ்வாறாயிலும், நசீருக்குக் கிடைத்த மாகாண சுகாதார அமைச்சர் பதவி மூலமாக, அவர் தனது ஊருக்கும் சமூகத்துக்கும் குறிப்பிட்டுச் சொல்லுமளவு பயன்களைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.

எனவே, தற்போது அவருக்குக் கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலமாகவேனும், கடந்த காலத்தில் – அவர் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியென்பது – நமது நாட்டிலுள்ள உச்ச பதவிகளில் ஒன்றாகும். தான் சார்ந்த சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் உச்ச சபைக்குச் செல்லவுள்ள நசீர், அதற்கு ஏற்றால் போல் – தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி சண்டியர்களையும், அடாவடிக்காரர்களையும் வைத்துக் கொள்வதிலிருந்தும் தவிர்ந்து, புத்திசாலிகளையும் படித்தவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கு நசீர் தயாராக வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானோரில் அதிகமானோர், அங்கு இடம்பெற்ற அமர்வுகளில் கலந்து கொண்டு, எதையும் பேசியதற்கான பதிவுகள் குறைவாகவே உள்ளன. நாடாளுமன்ற அமர்வில் மிகவும் குறைவாகக் கலந்து கொண்டவர்கள் என்கிற கணக்கெடுப்பில், மு.காங்கிரசைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஹரீசுடைய பெயரும் உள்ளது என்கிற, வெட்கத்துக்குரிய தகவலையும் இங்கு பகிர்ந்து கொள்ள முடியும்.

எனவே, இப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களை – ஓர் ஊர் பெற்றுக் கொள்வதை விடவும், பெறாமல் இருப்பதே அந்த ஊருக்கு நல்லதாகும்.

ஆகவே, அட்டாளைச்சேனையில்  ஜாலால்தீனுக்குப் பிறகு – நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நசீருக்கு கிடைக்கவுள்ளது. ஜலால்தீன் ஒரு வைத்தியர், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்புலமை கொண்டவர், அவரின் நட்பு வட்டங்களும் படித்தவர்களைக் கொண்டிருந்தது. அதனால்தான் ஜலால்தீன் என்கிற நாடாளுமன்ற உறுப்பினரைப் பற்றி, அவரின் மரணத்தின் பின்னரும் அவரின் சொந்த ஊர் நினைத்துப் பேசி, போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நசீரும் – அட்டாளைச்சேனையின் மறக்க முடியாத மகிழ்ச்சிக்குரிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவாவாகும். அப்போதுதான் அட்டாளைச்சேனையும் நசீரை நினைத்து பெருமை கொள்ள முடியும். அதற்கு – நசீர், தன்னில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போது அவர் கையாண்டு வரும் அரசியலை வைத்துக் கொண்டு,  அந்த மாற்றங்களை அவரால் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை, அவர் முதலில் மனதில் கொள்ளுதல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்