தம்பியும், மகனும் தேர்தல் களத்தில்; அரசியலா செய்கிறார் உதுமாலெப்பை; கசப்பான அனுபவம் இனியும் வேண்டாம்

🕔 January 23, 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) –

‘அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்’ என்கிற தலைப்பில் நேற்று ஒரு பதிவினை எழுதியிருந்தேன். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும், அவரின் கட்சி அமைப்பாளர் உதுமாலெப்பையும் அரசியலை வைத்து, எப்படி அவர்களுடைய குடும்பங்களை வளர்த்து வருகின்றனர் என்பது பற்றி அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், உள்ளுராட்சி எனும் குடும்பத் தேர்தல் மூலமாக அதாஉல்லாவும் உதுமாலெப்பையும் எப்படி தங்கள் குடும்பத்தவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியலை மேற்கொள்கின்றனர் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆயினும், சில விடயங்கள் அந்தப் பதிவில் விட்டுப் போயிற்று என்பதால், இந்தப் பதிவையும் எழுத வேண்டியாயிற்று.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக, அவருடைய தம்பியை களமிறக்கியிருக்கிறமையை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அவரின் மகனையும் இந்தத் தேர்தலில் விகிதாசார பட்டியலில் உதுமாலெப்பை வேட்பாளராக்கியுள்ளார். அதை நேற்று எழுதவில்லை.

உதுமாலெப்பை முகம்மது சபீர் எனும் பெயருடைய தனது மகனையும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் தேசிய காங்கிரசின் விகிதாசார பட்டியல் மூலமாக உதுமாலெப்பை களமிறக்கியுள்ளார்.

ஆக, தேசிய காங்கிரசின் தலைவர் தனது இரண்டு மகன்களையும் அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் களமிறக்க, அந்தக் கட்சியின் அமைப்பாளர் உதுமாலெப்பை – தனது தம்பியையும், மகனையும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறக்கியிருக்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், இரண்டு பேருடைய குடும்பங்களை வளப்படுத்துவதற்காகத்தான் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய காங்கிரஸ் போட்டியிடுகிறது போலவே தெரிகிறது.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக உதுமாலெப்பை இருந்த போதும், குடும்பத்தையே வளர்த்தார். இப்போது, பதவி இழந்த நிலையிலும் அதைத்தான் செய்கிறார்.

அப்படியென்றால், உதுமாலெப்பையின் குடும்பத்தை வளர்க்கும் அரசியலுக்காக, நமது இளைஞர்களும், வாக்காளர்களும் ஏன் தமது கால நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.

கிழக்கு மாகாண அமைச்சர் என்கிற அதிகாரத்தை வைத்துக் கொண்டு, அட்டாளைச்சேனையின் மிகப் பெரும் இயற்கை வளமான கோணாவத்தை ஆற்றினை மண்ணிட்டு நிரப்பி, உதுமாலெப்பை காணி பிடித்த கதையும், ஆற்றினை அகலப்படுத்துகிறேன் என்று கூறி, ஏழை மக்களின் காணிகளை தோண்டி, இல்லாமலாக்கிய கதையும், மக்கள் மனதிலிருந்து இன்னும் மறக்கவில்லை.

உதுமாலெப்பையும் அவரின் வேட்பாளர்களும் சில நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவுக்கு – வாக்குக் கேட்டுப் போனபோது, மேற்சொன்ன அநீதியினால் பாதிக்கப்பட்டவர்கள், உதுமாலெப்பையை கடுமையாக திட்டி அனுப்பியுள்ளனர்.

உதுமாலெப்பையின் கையில் அதிகாரம் இருந்த போது, அட்டாளைச்சேனை மக்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள் இன்னும் தொடரக் கூடாது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், உதுமாலெப்பையின் தம்பியும், மகனும் வெற்றி பெற்று உறுப்பினர்களானால், இன்னுமொரு கசப்பான அனுபவத்தை எதிர்கொள்வதற்கும், மக்கள் தயாராக வேண்டும்.

மண்ணை அள்ளி தங்கள் தலையில் கொட்டுவதற்கு யார்தான் விரும்புவார்கள்.

தொடர்பான பதிவு: அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்