சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும்

🕔 January 23, 2018

– ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக் –

மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ரகசிய ஆவணங்கள் உள்ளன  என்கிற கதைகள், மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அக் கதை உண்மையா அல்லது பொய்யா என்பதை அறியும் காலம் நெருங்கிவிட்டது எனலாம்.

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் இடம்பெற்ற மு.கா.வின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து “ வித்துவானிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் ” என்ற பாணியில் சவால் ஒன்றை விடுத்திருந்தார். இதனை பெரிதாக தூக்கிப் பிடித்து மு.கா. தொண்டர்களும் பிரச்சாரம் செய்தனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை ஏறாவூரில் “ மரணித்த குமாரி குரேயின் வாக்கு மூலம் ” ஒன்று வெளியாகி இருந்தது. ‘தவளையும், தன் வாயால் கெடும்’ என்பதை போல, இது அமைச்சர் ஹக்கீம் தனது வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய விடயமாகும்.

இருந்தபோதும், இவ்விடயமானது அமைச்சர் ஹக்கீமை விட்டும் பூரணமாக மக்கள்  பார்வையை திருப்புவதற்கு போதுமானதாக அமைந்திருக்கவில்லை. இதற்கு இன்னுமொரு காரணம், குமாரி குரே தொடர்பாக பல விடயங்கள் வெளியிடப்பட்டு, அவ் விடயங்கள் மக்கள் மத்தியில் புளித்துப் போன ஒன்றாக இருந்தமையையுமாகும்.

இருந்தாலும், சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட காணொளியானது, இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளி போன்றதல்ல என்பது மிக முக்கிய விடயமாகும். அன்று வெளியிடப்பட்ட காணொளியானது, குமாரி குரேயிடம் மு.கா.வின்முன்னாள் தவிசாளர்பஷீர் சேகுதாவூத் நேரடியாக கதைத்துக்கொண்டிருக்கும் போது பதிவு செய்யப்பட்டவையாகும். இதற்கு முன்னர் இது எப்போதும் வெளியிடப்படவில்லை. இப்படியான சமாச்சாரங்கள், மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் உள்ளன என்பதை கூட, அமைச்சர் ஹக்கீம் அன்றுதான் அறிந்திருக்கலாம்.

இது சீரிய முறையில் சிந்திப்போருக்கும், மரியாதையான செயற்பாடுகளை விரும்புவோருக்கும் ஒரு சிறந்த செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இது அவரிடமுள்ள பெரிய ஆதாரங்களில் சிறியதொரு ஒரு பகுதி என்றே நம்பப்படுகிறது. ஒருவருடைய  மானத்தை பகிரங்க காட்சிப் பொருளாக்க யாருக்குமே உள்ளம் இடம் கொடுக்காது. அந்த வகையிலான சிந்தனைகளினாலேயே அவை வெளிப்படுத்தப்பட தயக்கம் காட்டப்படுகின்றன.

ஆனால், அமைச்சர் ஹக்கீம் சவால் விட்டால், அதனை பஷீர் வெளியிட நிர்ப்பந்திக்கப்படுவார். சம்பந்தப்பட்டவரே சவால் விடும் போது, அதனை வெளியிடாமல் இருப்பது பஷீரின் பலவீனமாகிவிடும்.

இதேவேளை, அமைச்சர் ஹக்கீம் மேலும் சவால்களை விட்டு, பஷீரிடம் ஆதாரம் கேட்பாராயின், இன்னும் சில விடயங்கள் வெளிப்படலாம். எனவே, இதன் பிறகு, வித்துவான் என்று அமைச்சர் ஹக்கீமால் அழைக்கும் பசீரிடம், ஒரு போதும் ஆதாரம் கேட்க மாட்டார் என்று நம்பலாம்.

மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பற்றி அமைச்சர் ஹக்கீம் விடுக்கும் ஒவ்வொரு விடயத்துக்கும் அல்லது சவாலுக்கும், மு.காவின் முன்னாள் தவிசாளர் விடையளிக்கும் மனோ நிலையில் உள்ளார் என்பதையும் இவ்விடயத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் பிறகும் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பற்றி ஹக்கீம் கதைக்க மாட்டார் என்றுமம் பரவலாகப் பேசப்படுகிறது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்