மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

🕔 August 18, 2015

Athaulla - 125– முன்ஸிப் –

தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்த நிலையில், அந்த ஆசனங்களுக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி மற்றும் கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியலின் ஊடாக, முதன் முதலில் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். அதாஉல்லா, பின்னர் அந்தக் கட்சி சார்பாக இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற அவர், தேசிய காங்கிரஸ் எனும் புதிய கட்சியொன்றினை ஆரம்பித்தார்.

மு.காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று, புதிய கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்ட அவர், ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து – வெற்றிலைச் சின்னத்தினூடாக, இரண்டு தடவை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்த இரண்டு தடவையும், அவர் அமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டே, பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மு.கா.விலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னர், அமைச்சராக அல்லாமல் அதாஉல்லா எதிர்கொண்ட முதலாவது தேர்தல், நேற்று நடந்து முடிந்த பொதுத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில், அதஉல்லா தோல்வியடைந்துள்ளார்.

இதேவேளை, தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தினை தன்வசம் வைத்துக் கொண்டுள்ள அதாஉல்லா,  தனது கடசினூடாக, இதுவரை எந்தவொரு பொதுத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், அமைச்சரவை அமைச்சராக பதவி வகித் அதாஉல்லா, மஹிந்த ராஜபக்ஷவின் மிக முக்கிய விசுவாசிகளில் ஒருவராகவும் இருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்