அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம்

🕔 January 22, 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) –

ள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். கட்சிக்கு முன்னுரிமை வழங்கி வாக்களிப்பதை விடவும், வேட்பாளர்கள் யார் எனப் பார்த்து, தமது உறவு முறையானவர்களுக்கு உள்ளுராட்சித்  தேர்தலில் அதிகமானோர் வாக்களிப்பர். அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள்.

ஆனால், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இரண்டு ஊர்களிலும் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்களும், அதாஉல்லா மற்றும் உதுமாலெப்பை என்கிற இரண்டு – தனி நபர்களின் ‘குடும்பங்களை வளர்ப்பதற்கான’ தேர்தல்களாக இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்படுகின்றனர்.

தேசிய காங்கிரசின் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னாள் அமைச்சராவார். தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரான எம்.எஸ். உதுமாலெப்பை – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சராகப் பதவி வகித்தவர்.

திருந்தாத அதாஉல்லா

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் தனது மூத்த மகனை கடந்த முறை களமிறக்கி வெற்றி பெற வைத்த அதாஉல்லா; அவரை – மேயர் பதவியிலும் அமர வைத்துப் பார்த்தார்.

அதனால், அக்கரைப்பற்று மாநகர சபை என்பதை, அந்த ஊர் மக்கள்; ‘அக்கரைப்பற்று மகனார சபை’ என்று சொல்லி கிண்டல் செய்த கதைகளையெல்லாம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், இம்முறை நடைபெறவுள்ள அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, தனது இரண்டு புதல்வர்களையும் அதாஉல்லா களமிறக்கியுள்ளார்.

கடந்த முறை – ஒரு மகனை களமிறக்கிய போதே, அதாஉல்லாவுக்கு அவரின் கட்சிக்குள்ளும் வெளியிலும் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. ஆனால் அவற்றினையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, இம்முறை தனது இரண்டு புதல்வர்களையும் தேர்தலில் அதாஉல்லா களமிறக்கியிருக்கிறார். “நான் எதைச் செய்தாலும், அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்கிற அதாஉல்லாவின் வீராப்புக் குணம்தான் இதற்கு காரணமாகும்.

மக்களின் விருப்புக்கு மாறாக முடிவுகளை எடுத்ததன் பயனை, கடந்த பொதுத் தேர்தலில் அதாஉல்லா அனுபவித்து, தோல்விக்கு மேல் தோல்வியினைச் சந்தித்த பிறகும், அவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே, மகன்களைக் களமிறக்கியுள்ள அவரின் முடிவு காட்டுகிறது.

எனவே, மக்களின் விருப்பு வெறுப்புக்களைக் கணக்கெடுக்கத் தவறிய அதாஉல்லாவின் சர்வதிகாரக் குணத்துக்கு, எதிர்வருகின்ற அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் – நிச்சம் மக்கள் மருந்து கட்டுவார்கள் என எதிர்பார்கலாம்.

குடும்பம் வளர்க்கும் உதுமாலெப்பை

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கட்சியை அக்கரைப்பற்றில் ‘உருட்டி’க் கொண்டிருப்பவர் உதுமாலெப்பை. அரசியலில் அதாஉல்லாவை பிரதி செய்து, தனது அரசியலை ‘ஓட்டி’க் கொண்டிருக்கிறார். அதனால் அதாஉல்லாவின் ஏராளமான அரசியல் குணாம்சங்கள் இவரிடமும் உள்ளன.

அதாஉல்லாவைப் போல், உதுமாலெப்பையும் குடும்ப அரசியல் செய்பவர். அரசியல் மூலம் குடும்பத்தை வளர்த்துக் கொண்டிருப்பவர். கடந்த காலங்களில் மாகாண அமைச்சராக உதுமாலெப்பை இருந்தபோது, அந்த அமைச்சு மூலமும், தனது பதவி மூலமும் கிடைத்த வரப் பிரசாதங்களில் எக்கச் சக்கமானவற்றினை தனது குடும்பத்தினருக்கே வழங்கி வந்தார்.

அதனால்தான், அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பையால் ஒரு கட்டத்துக்கு மேல் தனது அரசியலை வளர்க்க முடியாது போயிற்று. அதேவேளை, உதுமாலெப்பை அமைச்சராக இருந்த போது, அவருக்கான ‘மக்கள் தொடர்பு அதிகாரி’ எனும் பதவியில் தனது சொந்த சகோதரனையே அமர்த்தினார். அதனூடாகக் கிடைத்த சம்பளம், வாகனம், அதற்கான எரிபொருள் என – பல லட்சம் ரூபாய்கள், உதுமாலெப்பையின் சகோதரருக்கு ஒவ்வொரு மாதமும் கிடைத்து வந்தது. மட்டுமன்றி, உதுமாலெப்பையின் அமைச்சு மூலம் வீதிகள் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது, அவற்றினை பொறுப்பெடுத்த கொந்தராத்துக்காரர்களிடமிருந்து, அவருக்கும் அவரின் சகோதரருக்கும் கிடைத்த வருமானங்கள் பல கோடி ரூபாய்களாகும்.

இப்போது, அதாஉல்லா பதவி எதிலும் இல்லை. உதுமாலெப்பையும் பதவி இழந்து விட்டார். உதுமாலெப்பையின் ஊடாக அவரின் சகோதரர் அனுபவித்த பதவியும் பறி போய் விட்டது.

அதனால்தான், அதாஉல்லா தனது மகன்களையும், உதுமாலெப்பை தனது சகோதனையும் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் களமிறக்கியுள்ளனர். அதாஉல்லாவும் உதுமாலெப்பையும் அரசியலில் அனுபவித்து ருசி கண்டவர்கள். அதனால்தான் இவர்கள் தமது வாரிசுகளையும் அரசியலுக்குள் புகுத்த நினைக்கின்றனர். (அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், உதுமாலெப்பை தனது குடும்பத்திலிருந்து மேலும் சிலரையும் களமிறக்கியுள்ளார். அது குறித்து இங்கு நாம் பேசவில்லை)

எனவே, இரண்டு தனி நபர்களின் பொருளாதாரங்களை மீள மீள வளர்ப்பதற்காக, அக்கரைப்பற்றும் அட்டாளைச்சேனையும் அரசியலில் தொடர்ந்தும் பலி கொடுக்கப்படக் கூடாது.

இவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக, மேற்படி இரண்டு ஊர்களும் பலிகொடுக்கப்பட வேண்டிய தேவைகளும் கிடையாது.

எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் என்பது ‘குடும்பத் தேர்தலாக’ இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால், அதாஉல்லாவினதும் உதுமாலெப்பையினதும் ‘குடும்பங்களை வளர்க்கும்’ தேர்தலாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்