சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

🕔 January 16, 2018

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.

மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார்.

இதனை அறிந்து கொண்ட சாய்ந்தமருது மக்கள், ரஊப் ஹக்கீமை சுற்றி வளைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது பிரதான வீதி ஊடாக பயணித்த வாகனங்களை நிறுத்தி, மு.கா. தலைவர் இருக்கின்றாரா எனத் தேடத் தொடங்கினர்.

இதனை அறிந்து கொண்ட ஹக்கீம், வழமையாகப் பயணிக்கும் சாய்ந்தமருது பிரதான பாதையினைத் தவிர்த்து, சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்றிருந்தார்.

இதேவேளை, இதனை அறிந்திராத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், பாலமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், மருதமுனைக்குச் செல்வதற்காக சாய்ந்தமருது பிரதான வீதி ஊடாக பயணித்தார்.

இந்த நிலையில், ஹுனைஸ் பாறூக்கை அடையாளம் கண்டு கொண்ட சாய்ந்தமருது மக்கள்,  அவரின் வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியதாகத் தெரியவருகிறது.

அன்றைய தினம் இரவு, சாய்ந்தமருதிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரசாரக் கூட்டமொன்றினை நடத்திய போது, அதற்கும் சாய்ந்தமருது மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கலைக்கப்பட்டமையின் காரணமாகவே, மக்கள் இவ்வாறு மு.காங்கிரசுக்கு எதிராக தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருவதாக அறிய முடிகிறது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்துக்கு எதிராக, தேர்தல் ஆணைக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு செய்தமையினாலேயே, அந்தப் பள்ளிவாசலின் நிருவாகம் கலைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்