பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை

🕔 January 15, 2018
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனையில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில், கரைவாகு வடக்கு பிரதேச சபை அதே எல்லைகளுடன் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கரைவாகு மேற்கு பிரதேச சபை அமையவேண்டிய தேவைப்பாடு தமிழர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் நற்பிட்டிமுனை மக்கள் அநாதரவாக விடப்பட்டு இன்னுமொரு பிரதேச சபைக்குள் உள்வாங்கப்படக்கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எங்கிருந்து எல்லைகள் போடலாம், கல்முனை மாநகரரை எப்படி காப்பற்றாலாம் என்றெல்லாம் நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நாங்கள் அழைத்துப் பேசுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம். நீண்டகாலமாக இருக்கின்ற இந்தப் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண வேண்டுமென சிலர் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் கட்சி பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டு, பல உத்தரவாதங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படி கொடுத்த உத்தரவாதங்களை, இதய சுத்தியுடன் நிறைவேற்ற முற்படுகின்றபோது, எதிர்பாராதவிதமாக எதிர்ப்புகள் கிளம்புகின்றன. சில மாற்றுக் கட்சிக்காரர்கள் இதன் பின்னாலிருந்து குளிர்காய முற்படுகின்றனர். கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில், பள்ளிவாசலுடன் இந்தப் பிரச்சினையை சம்பந்தப்படுத்தி, எங்களால் இதனை தீர்த்துதர முடியும் என்ற பாங்கில் அவர்கள் செயற்படுகின்றனர்.

இன மற்றும் பிரதேச நல்லுறவுக்கு குந்தகமில்லாத வகையில், நாங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும். இதனை தீர்ப்பத்தில் இருக்கின்ற சிக்கல்கள் காரணமாக தாமதங்கள் ஏற்படுகின்றன. இதுவிடயத்தில் கல்முனை மக்கள் ஏற்படுத்திய பிரச்சினையால் ஏற்பட்டுள்ள சிக்கல் எப்படியாவது தீர்க்கப்பட வேண்டும். இதற்கான முயற்சியை நாங்கள் இதயசுத்தியுடன் மேற்கொண்டு வருகிறோம். பொறுமையில்லாமல் இந்த விடயங்களை நாங்கள் கையாளமுடியாது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில், முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்காகவே இதனை பெரிய பூதாகரமாக்கி, முஸ்லிம் காங்கிரஸுக்கு வேலி கட்டிக்கொண்டு அரசியல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வேலிகளை உடைத்துக்கொண்டு சாய்ந்தமருது மண்ணில் எமது வெற்றியை உறுதிப்படுத்துவோம்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்