அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம்

🕔 January 12, 2018

நூறு நாட்களுக்குள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தற்போது தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவுக்கு பதவி ஆசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“பொதுவாக ஒரு பதவிக்கு வருவதற்கு முன்பு அரசியல் வாதிகள் கூறுவதை, அப் பதவியில் அமர்ந்த பிறகு நிறைவேற்றுவதில்லை. எங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை இயன்றளவு நிறைவேற்றினோம்.

தற்போது ஜனாதிபதியாகவுள்ள மைத்திரிப்பால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்காக, பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். அதில் பிரதானமானது ஜனாதிபதிக்குரிய எல்லையற்ற அதிகாரங்களை நீக்குவேதாகும். அவருடைய வாக்குறுதியில் உள்ள விசேடம் என்னவென்றால், அதனை 100 நாட்களுக்குள்ளேயே நீக்குவதாகக் கூறியதாகுமு்.

100 நாட்கள் அல்ல, 1000 நாட்களும் கடந்துவிட்டன. அவர் அது பற்றி எதுவும் உருப்படியாக செய்யவில்லை. தற்போது அது பற்றி பேசுவதாக கூட இல்லை. பதவி ஆசை யாரைத்தான் விட்டு வைத்துள்ளது. அவர்கள் பிரதானமாக மக்கள் மன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளமையே, அவர்கள் ஆட்சி முழுமையாக தோல்வியடைந்துள்ளது என்பதற்கு சான்றாகும்.

தான் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என மைத்திரி கூறியவுடன், எல்லோரும் அவரை ஒரு தியாகியாக பார்த்தனர். அப்படியானவர், இப்போது தனது ஆட்சிக்காலம் எப்போது முடியுமென இப்போதே சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.

தனது ஆட்சியின் இறுதி நாளை, ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அறிய விரும்புகிறார் என்றால், இவ் ஆட்சிக் காலத்தின் இறுதி நாள் வரை ஆட்சியில் இருக்க வேண்டுமென, அவர் இப்போதே திட்டமிட்டுள்ளதை அறிந்துகொள்ள முடியும்.

இவரது ஆட்சி முடிவதற்கு சில ஆண்டுகள் உள்ளமை சாதாரண ஒருவருக்கும் தெரிந்த விடயம். அப்படி இருக்கையில், அவசரமாக தனது பதவிக்காலம் தொடர்பில் ஆலோசனை கோரியிருப்பது, தனது ஆட்சிக்காலப் பகுதி விரைவாக முடிந்துவிடுமென அஞ்சிக்கொண்டிருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

இதை பதவி ஆசையின் உச்ச நிலை எனலாம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்