சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா

🕔 January 11, 2018

– மப்றூக் –

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கான விசேட நம்பிக்கையாளர் சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்டடத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பிரதம பொறியியலாளரும், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ.எம். சாஹிர் என்பவரே இவ்வாறு தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தினை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணப்பாளருக்கு பக்ஸ் மூலம் இன்று அனுப்பி வைத்துள்ளதாகவும், கடிதத்தின் மூலப் பிரதியினை தபால் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பொறியியலாளர் சாஹிர் கூறினார்.

தான் சாய்ந்தமருது மண்ணில் பிறந்தவர் என்பதனால், அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாகவும் அவர் கூறினார்.

சாய்ந்தமருது பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலைத்து விட்டு, விசேட நம்பிக்கையாளர் சபையொன்றினை அமைத்துள்ளதோடு, அந்த சபையின் உறுப்பினர்களாக நான்கு பேரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நியமித்தது.

எவ்வாறாயினும், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் விசேட நம்பிக்கையாளர் சபைக்கு நியமிக்கப்பட்டவர்களிடம் விரும்பம் பெறப்படாமலேயே, அவர்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நியமித்துள்ளதாகத் தெரியவருகிறது.

Comments