நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு

🕔 January 11, 2018

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையினை, அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியதாக, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்தினை திசை திருப்புவதற்காகவே, அரசாங்கம் இதனைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“பிணை முறி மோசடி தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய பிரதான குற்றவாளி யார் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது. எனவேதான், நாடாளுமன்றத்தைக் குழப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டிய தேவை, அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டது என, தென்னகோன்” விபரித்தார்.

“நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒருவரின் தலையீட்டுடன் இவ்வாறானதொரு நிலைவரம் உருவாக்கப்பட்டமை, இதுவே முதல் தடவையாகும். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பிணை முறி மோசடியுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. இந்த நிலையில், அவரைக் குறிப்பிட்டு ‘மஹிந்த திருடன்’ என, பிரதமர் ஏன் கூச்சலிட வேண்டும்” என்று, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்தினை குழப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைதான் இது என்பது, வெளிப்படையாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உண்மையினை எதிர்கொள்வதிலிருந்து அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் விலகிச் செல்ல முடியாது எனவும், கீர்த்தி தென்னக்கோன் தேரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்