முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை

🕔 January 10, 2018

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குச் சொந்தமான காணியொன்றை மோசடியான முறையில், தனக்குச் சொந்தமான யுனிட்டி பில்டஸ் எனும்  நிறுவனத்துக்கு உடமையாக்கியமை உள்ளிட்ட பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் செய்னுலாப்தீனை (ஹாபிஸ் நஸீர்) கைது செய்ய உத்தரவிடுமாறு, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் உட்பட, மோசடியான காணி உறுதியை எழுதிய சட்டத்தரணி உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக, கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று புதன்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, மேற்படி கோரிக்கையினை சட்டத்தரணி விடுத்தார்.

கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

வாக்கு மூலத்தை பெற உத்தரவு

இதன்போது, சந்தேக நபர்களில் ஒருவரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் செய்னுலாப்தீனின் வாக்கு மூலத்தை உடனடியாகப் பெற்று, நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மோசடிப் புலனாய்பு பணியகப் பொலிஸாருக்கு நீதவான் கடுமையான உத்தரவினைப் பிறப்பித்ததோடு, அதனை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.

வழக்கு விசாரணையின் போது, முன்னாள் முதலமைச்சரின் முகவரியைக் கண்டு பிடிக்க  முடியாதுள்ளதாகவும், அவரின் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாகவும் மோசடிப் புலனாய்வுப் பணியகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர் அறியப்படாத ஒரு நபரல்லர் என்று தெரிவித்த நீதவான், தராதரம் பார்க்காது யுனிட்டி பில்டஸ் நிறுவனத்துடன் தொடர்புபட்ட அவரின் சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக வாக்கு மூலத்தைப் பதிவு செய்து, மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

குற்றம் ஒன்று மட்டுமல்ல

இதன்போது முறைப்பாட்டாளரான ஊடகவியலாளர் ஏ.கே.சி. துவான் நசீர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் தெரிவிக்கையில்; இவ்வழக்கானது முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமான காணியை மோசடியாக அபகரித்த ஒரு வழக்கு மாத்திரமல்ல. அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய முத்திரை வரியையும் செலுத்தாமல் சந்தேக நபர் மோசடி செய்திருப்பதால், குற்றவியல் கோவை பிரிவு 406இன் கீழ், நேரடியாக உள்வாங்கப்படும், 02 வருட சிறைத் தண்டனையை வழங்கக் கூடிய ஒரு குற்றமாகவும் உள்ளது. எனவே, சந்தேக நபரான நஸீர் அஹமட் என்பவரைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி வாதிட்டார்.

மேலும் கார்சன் அன் கம்பர்பெச் நிறுவனமானது, முஸ்லிம் காங்கிரசுக்கே குறித்த காணியை விற்பனை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டை கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்களும், நியாயமான காரணங்களும் இருப்பதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதன்போது, அவரைக் கைது செய்வதற்கு முன்னர், அவரின் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறிய நீதவான், அதன்பின் சகல சாட்சியங்கள், ஆதாரங்களையும் ஆராய்ந்து அதனைச் செய்ய முடியும் என தெரிவித்தார்.

கண்டனம்

கடந்த நொவம்பர் 08ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையிலிருந்து இன்றைய தினம் வரை, நஸீர் அஹமட்டிடம் இருந்து வாக்கு மூலம் பெறப்படாமை குறித்த தனது கண்டனத்தினையும் நீதவான் இன்றைய தினம் வெளியிட்டார்.

மேற்படி மோசடி தொடர்பில் கொழும்பு மோசடி புலனாய்வு பணியகம், ஏற்கனவே கொழும்பு காணிக் கச்சேரி பதிவாளர் மற்றும் கம்பனிப் பதிவாளர் நாயகம் ஆகியோரின் வாக்கு மூலங்களையும், காணி உறுதியை மோசடியான முறையில் மாற்றியதாக சந்தேகிக்கப்படும் சட்டத்தரணி ஒருவரின் வாக்கு மூலங்களையும் பெற்று, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்