தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி

🕔 January 8, 2018

– முகம்மட் றியாஸ் –

நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் அணி வெற்றி பெறுமாயின், அந்த அணியைச் சேர்ந்த நிந்தவூர்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், மீண்டும் தவிசாளராக நியமிக்கப்படுவார் என, அமைச்சர் றிசாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை பகிரங்க கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இது எதிரணியினரான யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சினருக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளதோடு, மயில் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரின் தலையிலும் இடியை இறக்கியுள்ளதாக பேசப்படுகிறது.

மயிலில் போட்டியிடும் அணியினர் வெற்றி பெற்றால் தாஹிரை தவிசாளராக நியமிப்போம் என்று அறிவித்துள்ளமையினைப் போன்று, யானையில் போட்டியிடும் அணி வெற்று பெறுமாயின், அந்த அணியில் யார் தவிசாளர் என்று அறிவிக்க வேண்டுமென,  அந்தப் பிரதேசத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன.

அதனால், யானைச் சின்னத்தில் போட்டியிடும் அணியினருக்கு – இது பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், தவிசாளர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் மயில் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும், அமைச்சர் றிசாட்டின் அறிவிப்பு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

நிந்தவூரில் வன்னியார் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே, தவிசாளர் கனவில் மிதந்து கொண்டிருப்பதாகவும், அவருக்கே மேற்படி அறிவிப்பு, பெரும் அதிர்சியினை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி, குறித்த  வேட்பாளரை அவருக்கு நெருக்கமானவர்கள் ‘சேர்மன்’ என, இப்போதே அழைக்கத் தொடங்கி விட்டதாகவும் தெரியவருகிறது.

மயில் சின்னமும் வெற்றி பெற்று, அந்த அணியைச் சேர்ந்த மேற்படி வேட்பாளரும் வெற்றி பெற்றால், தவிசாளர் பதவி தொடர்பில், பாரிய கயிறிழுப்பில் அவர் ஈடுபடக் கூடிய அபாயம் உள்ளதாகவும், மயில் அணிக்குள்ளேயே பேச்சுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்