பகிரங்க மேடையில் நின்று கொண்டே நீர் அருந்தும் நயீமுல்லாவின் இஸ்லாம்; எழுகிறது விமர்சனம்

🕔 January 8, 2018

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மைத்துனரும், அவரின் பிரத்தியே செயலாளருமான எம். நயீமுல்லா, பகிரங்கமான பொதுக் கூட்டமொன்றில், ஏராளமான மக்களின் முன்னால், நின்று கொண்டே நீர் அருந்தியமை குறித்து பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, நயீமுல்லா இவ்வாறு நடந்து கொண்டார்.

ஏறாவூரைச் சேர்ந்த மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முலமைச்சருமான ஹாபிஸ் நசீருக்கும் இடையில் பாரிய பிரச்சினை எழுந்தமையினால், ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில், அலிசாஹிர் மௌலானாவின் வேட்பாளர்களை தராசு சின்னத்திலும், ஹாபிஸ் நசீரின் வேட்பாளர்களை யானைச் சின்னத்திலும் ரஊப் ஹக்கீம் களமிறக்கினார்.

தராசு சின்னத்துக்குரிய முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக நயீமுல்லா பதவி வகிக்கின்றார். அதனால், அவரை ஏறாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுமாறு அலிசாஹிர் மௌலான அழைத்திருந்தார். அதன்போதே, இஸ்லாத்துக்கு மாற்றமான முறையில் நயீமுல்லா இவ்வாறு நின்று கொண்டு நீர் அருந்தினார்.

நின்று கொண்டு நீர் அருந்துதல் இஸ்லாத்தில் பாவமாகும். அதனை சிறிதளவும் கவனத்தில் கொள்ளாமல், நயீமுல்லா பகிரங்கமான ஒரு மேடையில் நின்று கொண்டு நீர் அருந்தியமையானது அங்கிருந்த பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

இதில் முரண்நகை என்னவென்றால், நின்று கொண்டு நீர் அருந்துவதற்கு முன்னர், “இன்ஷா அழ்ழா” என்று நயீமுல்லா கூறுவதாகும்.

பகிரங்கமான ஒரு மேடையில் மக்கள் முன்னால், இஸ்லாத்தின் வழிமுறைக்கு மாற்றமாக நடக்கும் இவ்வாறானவர்கள், யாரும் காணாத இடங்களில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று, சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றமையினையும் அவதானிக்க முடிகிறது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்