இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம்

🕔 January 6, 2018

– மப்றூக் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வந்த இரண்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், தற்போது அங்கிருந்து வெளியேறி, நிருவாகக் கட்டடத்துக்கு முன்னால் கூடாரமொன்றினை அமைத்து, அங்கிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில், நிருவாகக் கட்டடத்தினுள்ளிருந்து மாணவர்கள் வெளியேறியதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 28ஆம் திகதி நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்த மாணவர்கள், நேற்றைய தினம் வரை, அங்கு தங்கியிருந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

எவ்வாறாயினும், கடந்த 29ஆம் திகதியன்று, அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதிதவான் நீதிமன்றம், மாணவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவினையும் மீறி மாணவர்கள் போராட்டம் நடத்தியமையினால், அவர்களை நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை 53 மாணவர்கள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, மாணவர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், அவர்களை தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் விடுவித்தது.

இதனையடுத்து, மாணவர்கள் நிருவாகக் கட்டடத்திலிருந்து வெளியேறி, அதற்கு முன்பாக கூடாரம் அமைத்து, அதற்குள்ளிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிருவாகம் விதித்துள்ள தலா 02 வருட வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரி, இந்தப் போராட்டத்தினை மாணவர்கள் நடத்துகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்