தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி

🕔 January 5, 2018

– மப்றூக் –

நீதிமன்ற உத்தரவினையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தில் மறியல் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான மாணவர்கள் 53 பேரினையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுவித்தது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து கடந்த 28 ஆம் திகதி முதல், அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழக நிருவாகம் செய்த முறைப்பாட்டுக்கிணங்க, நிருவாகக் கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு, கடந்த 29ஆம் திகதி, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆயினும், நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தொடர்ந்தும் நிருவாகக் கட்டடத்தினுள் மாணவர்கள் மறியல் போராட்டத்தினை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், நீதிமன்ற உத்தரவினை மீறியமையினால், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு, நேற்று முன்தினம் புதன்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

குறித்த அழைப்பாணைகளை, ஒவ்வொரு மாணவரிடமும் பொலிஸார் தனித்தனியாக ஒப்படைத்திருந்தனர்.

இதற்கிணங்க, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 53 மாணவர்கள் இன்றைய தினம் ஆஜராகினர்.

இதன்போது நீதிமன்றக் கட்டளையினை அவமதித்தமை தொடர்பில், மாணவர்களை கடுமையாக எச்சரித்த நீதவான், பல்கலைக்கழகத்தில் பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் நிருவாகத்தினருடன் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதேவேளை, சம்பந்தப்பட்ட 53 மாணவர்களும், மாதத்தில் குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அக்கரைப்பற்ற பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்திட வேண்டுமெனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதன் பின்னர், ஒவ்வொரு மாணவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிருவாகத்தினர் விதித்துள்ள தலா 02 வருட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே, மாணவர்கள் இந்த மறியல் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழ நிருவாக கட்டடத்தினுள் இன்னும் சில மாணவர்கள் தொடர்ச்சியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்