ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு

🕔 January 4, 2018

மைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சுதந்திரக் கட்சியினர் அழைக்கின்றனர். ஆனால், அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார்.

குருனாகலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்;

சு.கட்யினரும், ஐ.தே.கட்சியினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு கண்டு திகைத்து நிற்கின்றனர். அதனை தடுப்பதற்கு என்னவெல்லாம் வழிகள் இருக்குமோ அத்தனை வழிகளையும் செய்து கொண்டுமிருக்கின்றனர். பதவி ஆசை காட்டி முன்னாள் ஜனாதிபதியுடன் உள்ள சிலரை கழற்றுவது அவர்களின் திட்டமாகும்.

அந்த வகையில் தங்களோடு வந்து இணையுமாறு சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் என்னிடம் வேண்டிக் கொண்டார். அப்படி இணைந்தால் முக்கியமான அமைச்சுப் பதவி தருவதாகவும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் இணைந்திருக்கும் நாங்கள் பதவி, பட்டங்களுக்காக ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. இதனை என்னோடு பேசியவர் நன்கு உணர்ந்திருப்பார். இதன் பிறகு முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளவர்களிடம் இப்படியான பேச்சுக்களை பேசும் போது, அவர் மிகவும் கவனமாக பேசுவார் என்றும் நம்புகிறேன்.

என்னிடம் பேசியவர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி, சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்கப் போவதாகவும் கூறினார். எமது பிரச்சினை என்ன என்பதையும், நாம் எதனை கூறினால் எம்மை, அவர்கள் பக்கம் வீழ்த்தலாம் என்பதையும் நன்கு அறிந்துள்ளார். இவர்களின் வாய் பேச்சை நம்பி, நாங்கள் செல்ல முடியாது. நாங்கள் மிகவும் நேசித்த கட்சியை யானையிடம் அடகு வைத்திருப்பது தான் எங்கள் அணியினரின் பிரச்சினையாகும்.

சுதந்திரக் கட்சியினர் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை துண்டித்தால், நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள தயாராக உள்ளோம்.

எது எவ்வாறு இருப்பினும், இது சு.கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் பாரிய பிளவு உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இவை அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூய்மையான அரசியல் பயணத்துக்கு சாதகமாகவே அமைந்துள்ளது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்