அதாஉல்லா பொய் பிரசாரம் செய்கிறார்: வேட்பாளர்கள் இருவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🕔 January 4, 2018
– அஹமட் –
தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, பொய் பிரசாரம் செய்து மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றார் எனத் தெரிவித்து, அக்கரைப்பற்று மாநகர சபைக்கான  தேர்தலில் போட்டியிடும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில், தேசிய காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் குற்றமொன்றினைப் புரிந்தார் எனும் சந்தேகத்தின் பேரில், அண்மையில் கைது செய்யப்பட்டு  நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்,  தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான வேட்பாளருக்குப் பதிலாக, அவரின் வட்டாரத்துக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் வேறு நபரொருவரை மேலதிக வேட்பாளராகவும் கள வேட்பாளராகவும் தாம் நியமித்துள்ளதாக, அக்கரைப்பற்றில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இருந்த போதும், வேட்பாளரொருவர் உயிரோடிருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக வேறு வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியாது என்பதால், தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா பொய்யான பரப்புரையினைச் செய்வதாகவும், அதன் மூலம் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கின்றார் எனவும் தெரிவித்து, அக்கரைப்பற்று மாநகரச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர், அதாஉல்லாவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் நூராணியா வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஏ.எம். சுல்பிகார் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வட்டாரத்தில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் ஏ.எம். றமிஸ் ஆகியோரே, அதாஉல்லாவுக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் நூறாணியா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் றபீக் என்பவர், அண்மையில் 23 ஆயிரம் ட்ரமடோல் மாத்திரைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், தேசிய காங்கிரஸ் சார்பாக நூறாணியா வட்டாரத்தில் இவர் போட்டியிடுகின்றார்.

இவருக்குப் பதிலாகவே, மேலதிகமாக கள வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளதாக, அதாஉல்லா தெரிவித்திருந்தார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்