பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார்

🕔 January 3, 2018

பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு, ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் பிணை முறி மூலம் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மொத்தமாக, சுமார் 1150 கோடி ரூபாய் உழைத்துள்ளது என, ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட உரை இன்று புதன்கிழமை நிகழ்த்தப்பட்டது.

2015 /2016 ம் ஆண்டு கால சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழு சமர்பித்திருப்பது இடைக்கால அறிக்கை அல்ல என்றும், 1257 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை என்றும் ஜனாதிபதி தனது விஷேட உரையில் கூறினார்.

தனது விஷேட உரையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாவது;

மத்திய வங்கியில் 2008 ம் ஆண்டு முதல் இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் தேடிப்பார்க்க முழுமையான கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டியதே முதலில் செய்ய வேண்டியது என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இது இலங்கை மத்திய வங்கியால் செய்ய வேண்டியுள்ளதுடன் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, சட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அந்தக் கால கட்டத்திலேயே அதிகமாக EPF நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆணைக்கழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இந்த அறிக்கையின் பிரதி தன்னால் தற்போது சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அறிக்கையின் பரிந்துரைப்படி குற்றவியல் மற்றும் சிவில் வழக்கு தாக்கல் செய்வது குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட வேறு நபர்களின் தலையீட்டின் காரணமாக, பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் – சட்டத்திற்கு மாறான முறையில் பணம் உழைக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் நாளன்று இடம்பெற்ற ஏலம் மூலம் மாத்திரம், பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் 688 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வருமானம் குறைந்தது 11,145 மில்லியன் ரூபா என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 8,529 மில்லியன் ரூபாவுக்கும் (850 கோடி) அதிகம் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளதாக ஜனாதிபதி தனது விஷேட உரையில் கூறினார்.

மகேந்திரன் தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக பிணைமுறி விநியோகத்தின் போது, உள்ளக தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புடையவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

அலோசியஸ் குடும்பத்துக்கு சொந்தமான மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த “வோல்ட் என்ட் ரோ” நிறுவனத்தால் பெண்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு வாடகை செலுத்தியமை சம்பந்தமாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பு ஏற்க வேண்டும்.

அவருக்கு எதிராக லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதுடன், ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சி வழங்கியமைக்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக, பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம், அர்ஜுன் எலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன போன்றோர் மற்றும் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள பொறுப்புக் கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக, குற்றவியல் மற்றும் சிவில் சட்டத்தை முன்னெடுப்பதற்கு பரிந்துரைப்பதாகவும், அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை மத்திய வங்கியில் இதுபோன்ற மோசடிகள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதற்கு புதிய நிதிச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிதிச் சபை உறுப்பினர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் போது அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரை இடம்பெற்ற பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கவில்லை என்பதனால், அதுகுறித்து விசாரிக்கவில்லை என்றும், எனினும் அது குறித்து விசாரிப்பது சிறந்தது என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

மீளப்பெற வேண்டிய பணத்தை சிவில் சட்டத்தினூடாக பெற முயற்சிப்பது காலம் தாழ்த்தும் செயல் என்பதால், இதற்காக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றி அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஏற்பட்ட செலவுகளை பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது விஷேட உரையில் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்