யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி

🕔 January 2, 2018

– எம்.வை. அமீர்-

சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்தகால கோரிக்கையான தனி உள்ளுராட்சி சபையினை மேலும் வலியுறுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே, நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை தாம் பார்ப்பதாக, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், தோடம்பழச் சின்ன சுயேட்சைக் குழுவில் சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.ஆர்.எம்.  அஸீம் தெரிவித்தார்.

குறித்த 21 ஆம் வட்டாரத்தில் சுயேட்சைக் குழுவுக்கான தேர்தல் அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது  ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபா கலந்து கொண்டதோடு, பள்ளிவாசலின் உயர்மட்ட உறுப்பினர்களும் ஊர்ப் பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.

சாய்ந்தமரு பிரதேச செயலகத்தின் முன்னாள் சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான எம்.எம். உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அஸீம்;

“சாய்ந்தமருதில் உள்ள 0வட்டாரங்களையும் வென்றெடுத்து, மேலதிக ஆசனங்களையும் பெற்றுக்கொண்டு, வேறு கட்சியுடன் கூட்டாட்சி செய்வதற்கு பள்ளிவாசல் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக சிலர் பேசிக் கொள்கின்றனர். இதில் உண்மை எதுவுமில்லை.

யாருக்கும் நாங்கள் முட்டுக்கொடுக்க போகமாட்டோம். முதல்வர் பதவிக்கோ அல்லது பிரதி முதல்வர் பதவிக்கோ சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை அடகு வைக்க மாட்டோம்.

சில அரசியல்வாதிகள் இருபதுகோடி முதல் முப்பதுகோடி வரை எங்களிடம் பேரம்பேசுகின்றனர். அதற்கு இந்த சுயட்சைக்குழு சோரம் போகாது.

என்னை தோக்கடிப்பதற்கு ஒருவர் ஒரு கோடி ரூபாய் செலவிடவுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. சாய்ந்தமருதில் திட்டமிட்டு பிரச்சனைகளை உண்டாக்கி தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்தும் யோசனைகள் சிலருக்கு உள்ளன. ஜனநாயக முறையில் தேர்தலை தாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.

நிகழ்வில் குறித்த வட்டரத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்