உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

🕔 December 31, 2017

– க. கிஷாந்தன் –

ள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தலில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் என்றால், அடுத்த முறை 30 வீதமாகும் எனவும், அதற்கு பின்னர் 45 வீதமாகும் என்றும் அவர் கூறினார்.

பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்த முதலாவது பிரசாரக் கூட்டம்,  இன்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளுராட்சி தேர்தல் அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அல்ல. நாடாளுமன்றத் தேர்தல் மூலமே அரசாங்கத்தை மாற்ற முடியும்.

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை 19 ஆவது திருத்தத்தின் மூலம் நாம் உறுதிப்படுத்தினோம். இந்த தேர்தலில் நகர சபை, மாநகர சபை பிரதேச சபைக்கான பிரதிநிதிகளேயே தெரிவுசெய்ய உள்ளோம்.

சிறந்த முறையில் யார் இதனை நிர்வகிப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இங்கு பல புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அம்பகமுவ, நுவரெலியா பிரதேசங்களில் ஆறு பிரதேச சபைகள் தற்போது உள்ளன.

நான் ஒன்றையே கேட்கவிரும்புகின்றேன். இவர்கள் இவ்வளவு காலமும் ஆட்சியில் இருந்து ஏன் ஆறு பிரதேச சபைகளை உருவாக்க முடியாமல் போனது? அதைப் பார்த்தாலே மாற்றம் தெரியும்தானே.

தற்போதுள்ள பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் கூறினார். அதற்கு நாம் இணங்கினோம். இந்த விடயத்தை நாம் எடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பாருங்கள் தற்போது ஆறு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏன் பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்க வேண்டும்? நகர சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா? அபிவிருத்தியே தேவையானது. அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும். இது புதியமுறையில் நடத்தப்படும் தேர்தல்.

அதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த முறையின் கீழ் 100 க்கு 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. அதனையார் கொண்டுவந்தது? நாமே அதனை செய்தோம். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்ற சட்டமூலத்தை சமர்ப்பித்தோம்.

நாம் செய்யாவிடின் யாரும் இது தொடர்பில் கூற மாட்டார்கள். இம்முறை 25 வீதம் என்றால் அடுத்த முறை 30 வீதமாகும். அதற்கு பின்னர் 45 வீதமாகும். இதற்கு முன்னர் எத்தனை பெண்கள் மலையத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து வந்தார்கள்? ஒருவர் கூட தெரிவுசெய்யப்படவில்லை. எனினும் தற்போது 25 வீதமானவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

ஒரு பக்கம் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. மறுபுறம் ஆறு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டுமே போதுமே. இப்போதுதான் இதனை செய்ய முடியவில்லையே என ஏனையவர்களுக்கு ஞாபகம் வருகின்றது. நெருக்கடியான காலப்பகுதிலேயே நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். நாட்டின் கடன்சுமை அதிகரித்து அதிகரித்து கடனை மீள கொடுக்க முடியாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி அதனை கைவிட்டுச் சென்றார்.தேர்தல் நடத்தப்பட்டது.

அந்தக் காலத்தில் மாத்திரமே அவர் தேர்தலை நடத்தினார். அதனை மறந்துவிட்டார்.பொருளாதாரத்தை மறுசீரமைக்க முடியாத நிலையிலேயே அவர் தேர்தலுக்குச் சென்றார்.கடனை பெற்று அதனை மீளச் செலுத்த முடியாத நிலையிலேயே அவர் தேர்தலுக்கு சென்றார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் இருந்தது கப்பல்கள் எதுவும் வரவில்லை. மத்தள விமான நிலையம் இருந்தது, விமானங்கள் வரவில்லை.

எம்மிடம் கையளிக்கப்பட்ட போது ஒரு சதம் கூட இருக்கவில்லை. அச்சமின்றி நாம் சவாலை ஏற்றுக்கொண்டோம். இன்று பொருளாதார ஸ்தீரத்தன்மை உள்ளது. சிரமப்பட்டாவது இலாபத்தை தேடி கடனை செலுத்திவருகின்றோம். நாம் முன்னோக்கிச் செல்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்