நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது

🕔 December 30, 2017

– மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிகிழமை கட்டளை பிறப்பித்துள்ள போதும், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், இன்று சனிக்கிழமையும் தமது மறியல் போரட்டத்தினைத் தொடர்ந்து வருகின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொறியியல் பீட மாணவர்கள் மூவருக்கும், தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழக நிருவாகம் விதித்துள்ள தலா இரண்டு வருடகால வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரியே, இந்த மறியல் போராட்டத்தை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினருக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடொன்றினை தாம் பதிவு செய்ததாக உபவேந்தர் நாஜிம் கூறினார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் – பொறியியல் பீட மாணவர்களுக்கும் தொழில்நுட்பவியல் பீட மாணர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், பொறியியல் பீட மாணவர்கள் மூன்று பேருக்கு, தலா இருண்டு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

அதேவேளை, தொழில்நுட்பவியல் பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை பகிடிவதை செய்த, அதே பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கும், பல்கலைக்கழ நிருவாகம் தலா இரண்டு வருட வகுப்புத் தடையினை விதித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை, மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தும் இடத்துக்குச் சென்ற அக்கரைப்பற்று பொலிஸார்ளூ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் கட்ளையிட்டுள்ளதாக அறிவித்ததோடு, நீதிமன்றக் கட்டளையின் பிரதியொன்றினையும் அங்கு ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை, பல்கழக நிருவாகமும், மாணவர்களின் இந்த மறியல் போராட்டமானது, பல்கலைக்கழ விதிமுறைகளுக்கு முரணானது எனத் தெரிவித்து, மாணவர்கள் மறியல் நடத்துமிடத்தில் அறிவித்தல் பிரதியொன்றினையும் ஒட்டியுள்ளது.

ஆயினும், நீதிமன்ற கட்டளையினையினையும் மீறி, மாணவர்கள் தொடர்ந்தும் தமது மறியல் போராட்டத்தினை இன்று சனிக்கிழமையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்