புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு

🕔 December 24, 2017

டகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளபுதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான நடவடிக்கையாகும் என்று, வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐ.நா.வின் இந்த நடவடிக்கைகள், முழு பொருளாதார முற்றுகைக்கு சமமானதாகும் என அரச செய்தி ஸ்தாபனத்துக்கு, வெளியுறத்துறை அமைச்சு கூறியுள்ளது.

வட கொரியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுதான், அமெரிக்காவை எதிர்ப்பதற்கான ஒரே வழியாகும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“ஐ.நாவின் புதிய தடைகள், எமது குடியரசின் இறையாண்மையை மீறுவதாகும். கொரிய தீபகற்பம் மற்றும் பரந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் சீர்குலைக்கும் போருக்கான நடவடிக்கை இதுவாகும்” எனவும் வட கொரியா கூறியுள்ளது.

வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்மானித்தது.

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்தத் தீர்மானம், வட கொரியாவின் எரிபொருள் இறக்குமதியை 90% வரை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.

ஏற்கனவே வட கொரியா மீது அமெரிக்கா, ஐ.நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மேற்படி புதிய பொருளாதாரத் தடையின் படி, வட கொரியாவின் எரிபொருள் பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்துக்கு 05 லட்சம் பீப்பாய்களாகக் குறைப்பது என்றும், கச்சா எண்ணெய்யை ஒரு வருடத்துக்கு 04 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் வட கொரியர்கள் 24 மாதத்தில் நாடு திரும்ப வேண்டும். வட கொரியாவின் முக்கிய ஆதாரமாக இருக்கும் வெளிநாட்டு பணத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த முடிவு அமைந்துள்ளது,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்