அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

🕔 December 22, 2017

– றிசாட் ஏ காதர் –

க்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர் மட்டத்தவர்கள் ஆலோசித்து வருவதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் – மயில் சின்னத்தில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையினை அடுத்து எழுந்துள்ள நிலைமை தொடர்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

எம்.ரி. ஹசனலி, பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும், றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கூட்டணியினை உருவாக்கியுள்ளமை அறிந்ததே.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்திலும், வேறு சில இடங்களில் வண்ணத்துப் பூச்சி சின்னத்திலும், உள்ளுராட்சித் தேர்தலில்  போட்டியிடுகின்றது.

இந்த நிலையில், அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, கடந்த 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவிருந்த, அக் கட்சியின் ஆதரவாளர்கள், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலின்போது, யாருக்கு வாக்களிப்பது என்கிற கேள்வி உருவாகியுள்ளது.

இதற்கு விடையளிக்கும் வகையிலேயே, மேற்கண்ட விடயத்தை – நஸார் ஹாஜி கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் எமது கூட்டமைப்பு இருந்தது. ஆனால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனால், எல்லாம் முடிந்து விட்டது என்றாகாது. அரசியலில் ஏராளமான சாத்தியப்பாடுகள் உள்ளன. அவை குறித்து கூட்டமைப்பின் உயர் மட்டத்தவர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.

அதேவேளை, கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தி, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் எந்தத் தரப்பினருக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டுமென, வழிநடத்த வேண்டிய தேவையுமுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு அக்கரைப்பற்றில் மிகக் கணிசமான ஆதரவுள்ளது. அந்த ஆதரவினை சமூக நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்து,  விரைவில் நல்லதொரு முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்