இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

🕔 December 22, 2017

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள் நிராகரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 09 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.

ஜெரூஸலம் நகரத்துக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் உரிமை கோரி வரும் நிலையில், இது தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில் “புனித ஜெரூஸலம் நகரத்தின் பண்பையும், நிலையையும், மக்கள் வகைப்பாட்டையும் மாற்றுகிற எந்த முடிவுக்கும் நடவடிக்கைக்கும் சட்ட மதிப்பு இல்லை, அது செல்லத்தக்கதும் இல்லை” என்று ஒரு தீர்மானம் குறிப்பிடுகிறது.

இதேவேளை, இது தொடர்பான முந்தைய பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்துக்கு ஏற்ப, அத்தகைய முடிவுகள் திரும்பப் பெறப்படவேண்டும் என்றும், 1980ல் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றின்படி, உறுப்பு நாடுகள் தங்கள் தூதரகங்களை புனித நகரான ஜெரூஸலமில் அமைக்கக்கூடாது என்றும் தற்போது பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானம் குறிப்பிடுகிறது.

இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்த பிறகும், இப்போது இத்தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

மிரட்டலையும், அச்சுறுத்திப் பணியவைக்கும் முயற்சியையும் நிராகரிக்கவேண்டும் என்று வாக்கெடுப்புக்கு முன்னதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சர், சபை உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்பார்க்கப்படும் முடிவினை முற்றாக நிராகரிக்கப்போவதாக, வாக்கெடுப்புக்கு முன்னதாகக் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு; ஐ.நா.வை ‘பொய்களின் அவை’ என்று குறிப்பிட்டார்.

Comments