தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல்

🕔 December 19, 2017

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீருக்கு வெகு விரையில் வழங்கப்படவுள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

ஹாபிஸ் நசீருக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உச்ச மட்டத்திலுள்ள இருவர், மு.கா. தலைவரை வற்புறுத்தி வருவதாகவும் அறிய முடிகிறது.

அதேவேளை, ஹாபிஸ் நசீருக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், பிரதியமைச்சர் பதவியொன்றினையும் வழங்குவதற்கு ஐ.தே.கட்சியின் மேற்படி உச்ச மட்டத்தவர்களில் ஒருவர், ஹாபிஸ் நசீரிடம் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல்களை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளார்.

மு.காங்கிரசுக்கு ஐ.தேசியக் கட்சியினால் வழங்கப்பட்ட இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றுக்கு – மு.கா. தலைவர் தனது சகோதரர் டொக்டர் ஹபீஸையும் மற்றைய தேசியப்பட்டியல் பதவிக்கு தனது நெருங்கிய நண்பர் சட்டத்தரனி எம்.எச்.எம். சல்மானையும் நியமித்திருந்தார்.

இந்த நிலையில், தனது சகோதரரிடமிருந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெற்ற ரஊப் ஹக்கீம், அதனை – தனது மனைவியின் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துள்ள, திருகோணமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்குக்கு வழங்கினார்.

ஆயினும், மு.கா. தலைவரின் நண்பர் சல்மானுக்கு வழங்கப்பட்ட அந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, சுமார் இரண்டரை வருடங்களாக, அவரிடமே தொடர்ச்சியாக உள்ளது.

சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு வழங்குவேன் என்று, மு.கா. தலைவர் – பல தடவை வாக்குறுதியளித்துள்ளமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்