தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடைய, சர்வதிகாரத்தின் பெறுமானத்தை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

🕔 December 19, 2017

ள்ளுராட்சித் தேர்தலில் பங்குகொள்ளும் அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் யாப்புகளையும் பதவி நிலை உத்தியோகத்தகளின் பட்டியலையும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின், ஆகப் பிந்திய திகதியிடப்பட்ட கையெழுத்துடன் பொது மக்களின் பார்வைக்கு தமிழ் மொழியில் வெளியிடவேண்டும் எனும் கோரிக்கை ஒன்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார்.

இந்த ஆவணங்களைப் பார்வையிட்டு அந்தக் கட்சிகளின் தலைவர்களுடைய சர்வாதிகாரத்தின் பெறுமானத்தைக் கணக்கிட்ட பின்னர்தான், சிறுபான்மை மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆவணங்களைக் கேட்டுப் பெறும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளதாகவும் பசீர் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது;

ஆங்கிலத்தில் கூட்டக் குறிப்புகளை எழுதி ஆங்கிலத்திலேயே வாசித்து, தொண்ணூறு வீதம் ஆங்கில மொழியைப் புரியாத உயர் பீட உறுப்பினர்களின் சம்மதம் பெற்ற வரலாறு தமிழ்பேசும் கட்சிகளில் இருக்கின்றன.

ஆங்கில மொழிப் புலமை உள்ளவர்களில் சிலர் விலைக்கும் பதவிகளுக்கும் வாங்கப்பட்டனர். இன்னும் சிலர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நடவடிக்கைகள் மூலமாக சர்வாதிகார வியாபாரத் தலைவர்கள் தமது விருப்பங்களை நிறைவேற்றினர். இதனால் தலைவர்கள் ‘சொர்க்கத்துக்கு’ ஈடேற்றம் பெற்றனர். இவற்றை நாம் கண்கூடாகக் கண்டோம் அல்லவா?

ஒரு முஸ்லிம் கட்சித் தலைவர், இன்னொரு ‘பார்டியை’ (Party – கட்சி) வைப்பாட்டி போல வைத்திருந்து, இம்முறை தேர்தலில் இறக்கியிருப்பதையும் காணக்கிடைக்கிறது.

எனவே, தமிழ் கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆகிய முஸ்லிம் கட்சிகளும், கூட்டமைப்புகளும் மேற் சொன்ன தத்தமது ஆவணங்களை தமிழ் பேசும் மக்கள் மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்