கண்டியில் மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

🕔 December 18, 2017

ண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை மற்றும் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று திங்கட்கிழமை செலுத்தியது.

கம்பளை நகரசபை மற்றும பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றிலும் தனித்துக் களமிறங்கும் மக்கள் காங்கிரஸ், நாளை கட்டுப்பணத்தை அங்கு செலுத்தவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் தெரிவித்தார்.   

“கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கால்பதித்து குறுகிய காலமாக இருந்த போதிலும், இந்தப் பிரதேச மக்களுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கணிசமான சேவைகளையும், உதவிகளையும் மேற்கொண்டிருக்கின்றார்.

பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்னின்று குரல்கொடுத்தும், உதவிகளை மேற்கொண்டும் வருகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது, இந்த மாவட்ட மக்கள் அபரிமிதமான அன்பையும், பற்றையும் வைத்திருப்பதனாலேயே எமது கட்சி தனித்துக் களமிறங்க தீர்மானித்தது.

இந்தவகையில், இறைவனின் உதவியுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும் அநேகமான பிரதேச சபைகளில், கணிசமான ஆசனங்களை நாம் பெறுவோம். இதன்மூலம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பயன்படுத்தி, சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக எமது கட்சி திகழும் என்ற நம்பிக்கையுடன் உள்ளூராட்சித் தேர்தலில் நாம் பயணிக்கின்றோம்.

பெரும்பான்மைக் கட்சிகளாலும், கடந்த காலங்களில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் கட்சிகளினாலும், இந்த சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு பயனும் கிடைக்காத நிலையிலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கண்டி மாவட்டத்தில் வளர்த்தெடுப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம்” என்றார்.   

இதன்போது, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் றிஸ்மி ஆகியோரும் உடனிருந்தனர்.

(அமைச்சரின் ஊடகப்பிரிவு)    

Comments