அட்டாளைச்சேனையை நசீர் மலினப்படுத்தி விட்டதாக, மு.கா. மத்திய குழு உறுப்பினர்கள் விசனம்; தேசியப்பட்டியல், விலை போய் விட்டதா எனவும் கேள்வி

🕔 December 12, 2017

– அஹமட் –

மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் எடுத்த தீர்மானத்தினை கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். நசீர் செயற்பட்டு வருவதாக, மத்திய குழுவின் உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர், அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.கா. தலைவர் வழங்க வேண்டும் என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் மரச் சின்னத்தில் மு.காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், இல்லா விட்டால், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் மு.கா. மத்திய குழு சார்பாக வேட்பாளர்கள் எவரையும் களமிறக்குவதில்லை எனவும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு கடந்த வாரம் சில தீர்மானங்களை மேற்கொண்டது.

குறித்த தீர்மானம் குறித்து, மு.கா. தலைவருக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்படி கோரிக்கைகள் நிறைவு செய்யப்படாத நிலையில், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நசீர், மு.காங்கிரசின் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து வருவதாக அறிய முடிகிறது.

இது குறித்தே, மத்திய குழு உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும், ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்திலேயே மு.காங்கிரஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், மு.கா.வின் அட்டாளைச்சேனைப் பிரதேச மத்திய குழு எடுத்த தீர்மானத்தை மழுங்கடிக்கும் வகையில், அக்குழுவின் தலைவர் நசீர் எவ்வாறு நடந்து கொள்ள முடியும் எனவும், மத்திய குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குறித்த தீர்மானங்களை மத்திய குழுவானது – அதன் தலைவர் நசீருடைய தலைமையிலேயே மேற்கொண்டதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால் அட்டாளைச்சேனை பிரதேசம் தெடர்ந்து ஏமாற்றப்படுவதற்கு முடிவு கட்டும் வகையில், அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் எடுத்த முடிவை, முன்னாள் அமைச்சர் நசீர் இப்படி மலினப்படுத்தியமையானது மாபெரும் துரோகமாகும் என்றும், மத்திய குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

மேலும், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது பணத்துக்கு விலை போய்விட்டதா என்கிற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்